Thunai _ Infa

Discussion in 'Short Stories' started by Lady's Wings, Nov 7, 2016.

 1. Lady's Wings

  Lady's Wings Roots of LW Staff Member Administrator

  Messages:
  1,628
  Likes Received:
  3,393
  Trophy Points:
  113
  Admin Post
  துணை

  மருத்துவமனையின் படுக்கையில் சோர்ந்துபோய் படுத்திருந்தாள் மகேஸ்வரி. காலில் போட்டிருந்த பெரிய கட்டும், தலையில் போட்டிருந்த பேன்ட் எய்டும்.., அவருக்கு நேர்ந்த விபத்தை பறைசாற்ற, சோர்வாக விழியை மூடித் திறந்தார்.

  முயன்று கண் திறந்தவர், தன் படுக்கையின் அருகில் அவள் கணவன் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருக்க, அதைப் பார்த்த மகேஸ்வரிக்கு கண்களில் நீர் கோர்த்தது.

  திருமணமான இந்த முப்பத்தைந்து வருடங்களில்.., ஒரு நாள் கூட கணவரை இவ்வளவு கவலையாக கண்டதில்லை. அதைவிட.., அவரையே பார்த்து பார்த்து கவனிக்க தான் கூடவே இருக்க வேண்டும். இதில்.., தன்னையும் அவர் கவனிக்க வேண்டுமே.., என எண்ணுகையிலேயே.., மனதுக்குள் பெரும் பாரம் குடியேறியது.

  “என்னங்க...”, மெதுவாக அழைக்க, மனைவி கண்விழித்துவிட்டதை உணர்ந்த தங்கவேலு.., வேகமாக எழுந்தவர் மனைவியை நெருங்கினார்.

  “ஈஸ்வரி.., என்ன.., கால் ரொம்ப வலிக்குதா? தலை வலிக்குதா? டாக்டரை கூப்பிடவா..?” அக்கறையாக வினவினார்.

  “அதெல்லாம் வலிக்கலை.., நீங்க பதட்டப்படாதீங்க..., புள்ளைங்களுக்கு தகவல் கொடுத்துட்டீங்களா? என்ன சொன்னாங்க..” சோர்வாக கேட்டார்.

  “ம்.., எல்லாருக்கும் தகவல் கொடுத்துட்டேன். ப்ரீ ஆனதும் வந்து பாக்குறதா சொல்லி இருக்காங்க..” ஆதரவாக பதில் கொடுத்தார்.

  “ஓ.., காவியா..?” இந்த நேரத்தில் மகள் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என அவர் மனம் விரும்பியது.

  “அவளுக்கும் தகவல் கொடுத்துட்டேன். உடனே வந்து பாக்க முடியலன்னு ரொம்ப வருத்தப்பட்டா..., என்ன செய்ய..? அவளும் புள்ளைங்களைப் பாக்கணுமே...” மகளை விட்டுக்கொடுக்காமல் பேசும் கணவனை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

  ஆண் இரண்டு.., பெண் ஒன்று என மூன்று குழந்தைகளைப் பெற்று, படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்தி..., வரன் பார்த்து, திருப்தியாக திருமணமும் செய்து கொடுத்தாயிற்று.

  மகன்கள் இருவரும் சென்னை, பெங்களூரு என செட்டிலாகிவிட, மகளோ.., தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என, கோவைக்கு அருகிலேயே திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.

  வருடத்துக்கு ஒருமுறை, இரண்டொரு நாள் மட்டும் உடனிருக்கும் மகன்கள்.., மாதம் தவறாமல் செலவுக்கென சிறு தொகையை அனுப்புவிட்டு தங்கள் கடமை முடிந்தது என ஒதுங்கிவிட, மாதம் தவறாமல் வரும் மகள்.., தாய்வீட்டில் சீராடிச் செல்வதையே விரும்பினாள்.

  திருவிழா..., பண்டிகை..., பிறந்தநாள் என அனைத்திற்கும் வந்து இரண்டு மூன்றுநாளாவது தங்கிச் செல்லும் மகள்.., ஒரு அவசர உதவிக்கு, மருத்துவமனைக்கு வர மறுப்பதை வேதனையாய் உள்வாங்கிக் கொண்டார்.

  “புள்ளைங்களை அவ மாமியார்கிட்டே ஒரு நாள் பாத்துக்க சொல்ல வேண்டியது தானே. சம்பந்தியம்மா கண்டிப்பா பாப்பாங்களே..” அவருக்கு மனசே ஆறவில்லை.

  “ம்ச்.., என்ன இருந்தாலும் நம்ம புள்ளைங்களை நாம பாக்குற மாதிரி இருக்குமா..?” மகளை குறை சொல்லுவதை அவர் விரும்பவில்லை என்பதை அவரது குரலே உணர்த்த, சட்டென அமைதியானார் மகேஸ்வரி
  .
   
   
 2. Lady's Wings

  Lady's Wings Roots of LW Staff Member Administrator

  Messages:
  1,628
  Likes Received:
  3,393
  Trophy Points:
  113
  Admin Post
  கணவருக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது.., வேளை தவறாமல் உணவு, ஜூஸ்.., கைகால் அமுக்குவது வரைக்கும் அவருக்கு தான் வேண்டும்.

  கணவருக்கு நண்பர்களோடு உரையாடாமல் இருப்பது பெரும் கடினம் என்பது புரிய, தான் இப்படி வந்து படுத்துக் கிடக்கிறோமே என எண்ணுகையிலேயே கண்கள் கலங்கியது.

  அதைவிட.., மருத்துவமனையில், ஒரு பெண்ணுக்கு பெண் செய்யும் உதவிபோல் வேறு எதுவும் அமையாதே..., மகள் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் அவரை வாட்டியது.

  அந்த வருத்தத்தை, அன்றைய நாள் முழுவதும் மனைவியோடு இருந்து, அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரை கொடுத்து, அவ்வளவு நாளும் கிச்சனுக்குள் சென்று சுடுதண்ணீர் கூட வைத்து பழகியிராதவர், கஞ்சி செய்து எடுத்துவந்து மனைவிக்குக் கொடுக்க.., இப்பொழுது ஆனந்தத்தில் அவர் கண்கள் நிறைந்தது.

  அன்று மாலையில் மருத்துவமனைக்கு வந்த மகள்.., ஒரு வேளை சாப்பாடு கொண்டு வந்துவிட்டு, சற்றுநேரம் உரையாடியவள், மருத்துவமனையில் தன்னால் தங்கவே முடியாது என கிளம்பிச் செல்ல.., அவளை இருக்கச் சொல்ல மனமின்றி இருவரும் அமைதியானார்கள்.

  மருத்துவமனையில் இருந்த அந்த மூன்று நாட்களும் எப்படியோ கடத்திவிட்டு, வீட்டுக்கு வர.., மகன்களும் தாங்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டு சென்றிருந்தார்கள்.

  கணவனின் தோள் பிடித்து நடந்து அவசர தேவைகளை முடிப்பது, மனைவியின் ஒத்துழைப்பில் சமைப்பது முதல், மெஷினில் துணிபோட்டு எடுத்து, அவர் துணையோடு மடிப்பது.., மாலையில் சிட்டவுட்டில் அமர்ந்து பேசுவது என அவர்கள் நாட்கள் கடக்க.., மகேஸ்வரிக்கோ.., பிள்ளைகளின் தவிர்ப்பு மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

  அடுத்த ஒரு மாதத்தில் மகேஸ்வரி வாக்கரின் துணைகொண்டு நடக்க, மனைவியை அழைத்துக்கொண்டு, அருகில் இருந்த பார்க்குக்கு சென்றார் தங்கவேலு.

  அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவர்கள், அங்கே விளையாடிய குழந்தைகளை சற்றுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

  “புள்ளைங்களை வளத்து, பாராட்டி சீராட்டி வளத்து என்ன பிரயோஜனம்.., நமக்கு ஒரு அத்தியாவசத் தேவைக்கு யாரும் கூட இல்லை. என்ன வாழ்க்கை இது..?” விரக்தியாக உரைத்தார் மகேஸ்வரி.

  இவ்வளவு நாளாக மனைவி மனதுக்குள் மறைத்துவைத்த விஷயங்கள் அனைத்தும், மனத்தாங்கலாக வெளியேற..., அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் தங்கவேலு.

  “ஏன் ஈஸ்வரி.., நான் ஒண்ணு கேட்டால் உண்மையா பதில் சொல்லுவியா..?” மனைவியின் கரத்தை, தன் கரத்துக்குள் அடக்கிக் கொண்டார்.

  இத்தனை வருடங்களில்.., இதுபோல் தன்னிடம் பேசியிராத கணவரை விழி விரிய பார்த்தவர், ‘கேளுங்க..’ என்பதுபோல் பார்த்தார்.

  “என்னை கல்யாணம் பண்ணும்போது என்ன நினைச்சு பண்ணிகிட்ட..? உண்மையா உன் மனசுக்குள் என்ன இருந்ததோ அதைச் சொல்லு..”.

  “இப்போ எதுக்கு இந்த கேள்வி..?”., கணவனை புரியாமல் ஏறிட்டார்.
  “சொல்லேன்..” அவர் ஊக்க...,

  “நான் பெருசா எதையும் நினைக்கலையே.., அப்பா சொன்னார்.., உங்களை கட்டிகிட்டால் நல்லா இருப்பேன்னு.., அவ்வளவுதான்...” அப்பாவியாக உரைக்கும் மனைவியை காதலாக பார்த்தது, மெல்லியதாக சிரித்தார்.

  “ஏன் சிரிக்கறீங்க..?” மெல்லியதாக கோபம் காட்டினார்.

  “சரி.., நான் கேள்வியை மாத்திக் கேக்கறேன். இவனை கல்யாணம் பண்ணிகிட்டா, மூணு குழந்தை பொறக்கும், கடைசி காலத்தில் உன்னை பாத்துக்கும்னா நினைச்ச..?” அவர் கேட்க, சற்று அதிர்ந்துபோய் அவரைப் பார்த்தார்.

  “என்னங்க நீங்க.., அப்படி யாராச்சும் நினைப்பாங்களா..?” மனத்தாங்கலாக திருப்பிக் கேட்க,

  “அதேதான்.., நீ என்னை நம்பி வந்த.., இவனை கட்டிகிட்டா நாம சந்தோஷமா இருப்போம். இன்பமோ துன்பமோ.., இவன் நம்மளோடவே இருப்பான்.., இதுதானே உன்னோட எண்ணமா இருந்தது. இப்போ மட்டும் ஏன்..?

  “பிள்ளைங்க என்பது.., வயசான காலத்தில் நம்மளை பாத்துக்க நாம உருவாக்கும் சேப்கார்ட் கிடையாது. நம்ம அன்பின் வெளிப்பாடு.., அவங்க நம்ம மூலமாக இந்த உலகத்துக்கு வந்து, அவங்க வாழ்க்கையை வாழப் பிறந்தவங்க, மாறாக.., நம்மை கவனிக்கப் பிறந்த பிறப்பு கிடையாது.

  “நம்ம வாழ்க்கையை நாம ரெண்டுபேர் மட்டும்தான் ஆரம்பிச்சோம்.., முடியும்போதும் நாம ரெண்டுபேர் மட்டும்தான். நடுவில் வந்தவங்க எல்லாம் நடுவிலேயே போய்டுவாங்க...

  “இந்த ஒரு மாசத்தில்.., எனக்கு ஒரு விஷயம் நல்லா புரிஞ்சது. என்னை எந்த அளவு நீ பாத்திருக்க.., இத்தனை வருஷத்தில்.., என் கர்ச்சீப்பை கூட நான் துவைக்கவோ..., தேடி எடுக்கவோ தேவையே இல்லாமல்.., என் நிழலாகவே இருந்திருக்க.

  “என்னோட ப்ரீ நேரங்களைக் கூட.., நண்பர்களோடு செலவழித்திருக்கிறேனே தவிர, உன்னோடு செலவிட நான் முயன்றது கிடையாது. இப்போ.., நான் உன்னை கவனிக்க.., உன்னோட பேச, உன் விருப்பங்களை அறிய, உனக்கு திருப்பிச் செய்ய.., கடவுளாகப் பார்த்து எனக்குக் கொடுத்த வாய்ப்பாகத்தான் நான் நினைக்கறேன்.

  “ஒரு மனுஷனுக்கு இளமையில் தன் துணையின் அவசியத்தை விட, முதுமையில் அவனது துணையின் தேவைதான் அதிகம். உன் கை கோர்த்து நான் நடக்க.., உனக்கு துணையிருக்க நான் இப்பவும் தயாரா இருக்கிறேன். நீ என்ன சொல்ற...” கோர்த்திருந்த மனைவியின் கரத்தை ஆதரவாக அழுத்த, ஒரு துளி நீர் விழியில் எட்டிப் பார்க்க, கணவனின் தோளில் சாய்ந்து கொண்டார்.

  கணவனின் கூற்றில் இருந்த உண்மை புரிய.., மெளனமாக அதை ஆமோதித்தார்.
  கொண்டவனின் துணை இருக்கையில் எந்த துன்பமும் தன்னை நெருங்காது. இதைவிட பெரிய துணை தனக்கு தேவையில்லை என்பது புரிய மகேஸ்வரியின் முகத்தில் அவ்வளவு நிறைவு.
   
   
 3. Deepa123

  Deepa123 Wings New wings

  Messages:
  517
  Likes Received:
  467
  Trophy Points:
  83
  True mam.very nice& awesome story.18:simile:
   
   
 4. aakaash

  aakaash Wings New wings

  Messages:
  25
  Likes Received:
  22
  Trophy Points:
  23
  really super story. its true.
   
   
 5. mithravaruna

  mithravaruna Bronze Wings New wings

  Messages:
  1,601
  Likes Received:
  2,748
  Trophy Points:
  133
  Excellent Story Mam. Really very Nice.
   
  Srjee likes this.
   
Loading...

Share This Page