பெண்களின் மனதை வென்ற எழுத்தாளர்

Discussion in 'General Discussion' started by arunthathi, Mar 24, 2018.

 1. arunthathi

  arunthathi Roots of LW Staff Member Administrator New wings

  Messages:
  220
  Likes Received:
  89
  Trophy Points:
  48
  Admin Post
  தமிழின் சிறந்த பெண் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், சமூக சேவகி என பன்முகத்தன்மை கொண்டவர் எழுத்தாளர் வசுமதி ராமசாமி. காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சிப் பெற்ற சுதந்திர போராட்ட வீராங்கனையான இவர், சென்னை அகில இந்திய வானொலியின் ஆரம்பகட்ட பேச்சாளர்களுள் ஒருவரும் கூட. இப்படி மேலும் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான வசுமதி ராமசாமி பற்றிய சிறுகுறிப்புடன் அவர் மகள் மற்றும் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் அவர் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்ட சில நினைவுகளும் இங்கே… தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1917ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தவர் வசுமதி. 12 வயதிலேயே இவருக்குத் திருமணம் ஆனது.
  [​IMG]
  கணவர் ராமசாமி வழக்கறிஞர். கணவரின் குடும்பம் முழுவதுமே சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்லாது இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். இவருக்கும் இலக்கிய ஆர்வமும், சுதந்திரப் போராட்ட உணர்வும் ஏற்பட இவரது கணவர் வீடு மிகப்பெரிய காரணமாக இருந்தது. வாசிப்பார்வமும், கள அனுபவ அறிவும் சேர்ந்து வசுமதியை எழுத வைத்தது எனலாம்.

  இவரது முதல் சிறுகதை ‘பிள்ளையார் சுழி’, ‘ஜகன் மோகினி' பத்திரிகையில் வெளிவந்தது. அதன் பின் வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதினார். நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. ‘காவிரியுடன் கலந்த காதல்', ‘சந்தனச் சிமிழ்', ‘பார்வதியின் நினைவில்', ‘பனித்திரை', ‘ராஜக்கா' ஆகி யவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இவர் ‘ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியரும் கூட.

  தமிழ் எழுத்தாளரான இவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். எழுத்துப் பணிக்குச் சமமாக சமூக சேவையிலும் முழுமை யாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். துணிச்சலான மனம் கொண்டவர். அதே சமயம் வயது வித்தியாசம் பாராமல் அனைவரிடமும் அன்பாக இருந்தவர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி இளைஞர்களின் உந்து சக்தியாய் இருந்தவர்.
  இத்தனை உழைப்பிற்கு இடையிலும் குடும்பத்தையும் நல்ல முறையில் நிர்வகித்தார் வசுமதி. இவரது கணவர் ராமசாமி மனைவியின் எழுத்தார்வத்துக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். ‘அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர்.
  [​IMG]
  தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமூக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் இவரது மகள்கள். வசுமதி ராமசாமி ஜனவரி 4, 2004ம் ஆண்டு தனது 86ம் வயதில் மறைந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போதும் அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது. ஜன சேவாமணி, ஸ்திரி ரத்னா போன்ற பல விருதுகளை வென்ற வசுமதி, தம்மால் பயன்பெற்ற ஏழைப் பெண்கள் உள்ளங்களையும் இலக்கிய ரசிகர்கள் உள்ளங்களையும் வென்று அவர் தம் மனங்களில் இன்றும் நிலையாக வாழ்கிறார்.

  திருப்பூர் கிருஷ்ணன்
  ‘‘வசுமதி அவர்களை பல முறை பார்த்து பேசி இருக்கிறேன். ஓர் எழுத்தாளர் என்பதை விடவும் அதிகமாக ஒரு சமூக சேவகியாகிப் பரிமாணம் கொண்டு வாழ்ந்தவர். வை.மு. கோதைநாயகி அம்மாள் ஆசிரியையாக இருந்து நடத்திய ‘ஜகன் மோகினி’ இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, தினமணிக் கதிர் மற்றும் சின்ன அண்ணாமலை நடத்திய வெள்ளிமணி முதலிய பல இதழ்கள் இவரது எழுத்துக்களை விரும்பி வெளியிட்டன. அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றி மணிமணியான ஆங்கிலக் கட்டுரைகள் பலவற்றை எழுதி இருக்கிறார்.

  அவர் எழுதிய காலத்தில் அவர் எழுத்து பலரால் கொண்டாடப்பட்டுப் பெரும் புகழடைந்தது என்பது, ஒரு வரலாற்று உண்மை. இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து வசுமதி ராமசாமி எழுதிய நாவலான ‘காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் குறிப்பிடத்தக்க ஒன்று. கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளி வந்த அதே கால கட்டத்தில், வசுமதி ராமசாமியின் ‘காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது.

  ‘‘ ‘தில்லானா மோக னாம்பாள்' வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. நானும் தில்லானா மோகனாம்பாளின் ரசிகை தான். அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?'' என்று அவர் சொன்னார். உள்ளத்தால் பண்பட்ட உன்னதமான எழுத்தாளரால் தான் இப்படி பேச முடியும். ‘கேப்டன் கல்யாணம்’ மறுபதிப்பாக வந்தபோது அதற்கு முன்னுரை எழுதி இருக்கிறேன். எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அம்புஜம்மாள் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர்.

  இவரை ஓர் எழுத்தாளராக உருவாக்கியதில் இவரது ஆதர்ச எழுத்தாளரான கல்கிக்குப் பெரும் பங்கு உண்டு. கல்கியின் மெல்லிய நகைச்சுவை இவரது எழுத்திலும் உண்டு. காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூகச் சேவைக்கான பயிற்சி பெற்ற சில பெண்களில் முக்கியமானவர் வசுமதி. காந்தி தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். வாழ்நாள் முழுதும் காந்தி வழியில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தவரும்கூட. தேசத்தலைவர்கள் பலருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். லால்பகதூர் சாஸ்திரியிடம் யுத்த நிதியாக அந்தக் காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். அப்போது அந்த சாதனை பலராலும் வியந்து பேசப்பட்டது.

  பிரபல சமூக சேவகிகளான முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் போன்றோரிடம் இவர் கொண்ட ஆழ்ந்த நட்பு இவரையும் சமூக சேவகி ஆக்கியது. அன்னிபெசன்ட் நிறுவிய ‘அனைத்திந்திய மாதர் சங்கம்' என்ற எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட மாபெரும் அமைப்பை நிர்வகித்து நடத்திவந்தார்.சீனிவாச நிலையத்தில் இன்றும் வசுமதி அம்மாவின் படம் உள்ளது.

  தமது மாதர் சங்கத்தின் மூலம் ஏராளமான ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இலவசமாகத் தங்கத் தாலி அளித்து வந்தார். (அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார். இலவசத் தங்கத் தாலி வழங்குவதும் தொடர்கிறது.) காந்தி ஜெயந்தி அன்று காந்தி குறித்து வானொலி நேரலையில் வசுமதி அவர்களை பேசச் சொல்லி இருந்தார்கள். அவர்கள் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்கிறது. ஏதோ கருவி கோளாறு காரணமாக வசுமதிக்கு வானொலியில் இருந்து எதுவும் கேட்கவில்லை.

  அது அவருக்குப் புரிந்தது. அதனால் எப்படியும் காந்தி பற்றி தானே பேச வேண்டும் என பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. ‘ஒருவேளை நீங்கள் பேசுவதும் மற்றவர்களுக்குக் கேட்காமல் போய் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என நான் கேட்டேன். ‘அதனால் என்ன? மற்றவர்களுக்கு கேட்கிறதா என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி காந்தி பற்றி மனதார ஒரு பத்து நிமிடம் எனக்கு நானே பேசியதாக இருக்கட்டும் என நினைத்துப் பேசினேன்’ என்றார். அவரது இந்த பதில் என்னை வியக்க வைத்தது.

  வசுமதியின் கணவர் ராமசாமி முன்னணி வழக்கறிஞர். இசையறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். அவருடன் வசுமதி 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார். வசுமதி அவர்கள் உடல்நலமில்லாமல் பேஸ்மேக்கர் வைத்திருந்த சமயத்திலும் வை.மு. கோதைநாயகி குறித்து பேச கேட்டதற்கு உடனே பேசினார். ஒரு பிள்ளை, இரண்டு பெண்கள், மூன்று பேரன்கள், மூன்று பேத்திகள் என 86 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தவர் வசுமதி.’’

  சுகந்தா சுதர்சனம் (வசுமதி ராமசாமியின் மகள்)
  ‘‘அம்மா எப்போதும் காலை நேரங்களில்தான் எழுதுவார். கணக்குப் பிள்ளைகள் பயன்படுத்தும் சின்ன மேஜையில் தரையில் அமர்ந்து எழுதுவார். அதில் எந்த அடித்தல் திருத்தலும் இருக்காது. அவரது கையெழுத்தும் அழகாக இருக்கும். ஒரு நோட் புக்கில் எழுதுவார். அதனை தனக்காக வைத்துக்கொள்வார். இதழ்களுக்கு அனுப்ப அவரே இன்னொரு பிரதி எடுப்பார். அக்கா விஜயலட்சுமியின் கையெழுத்தும் நன்றாக இருக்கும். அதனால் அவள் வளர்ந்த பிறகு அம்மா சொல்ல சொல்ல அக்கா கதை, கட்டுரைகளை எழுதுவாள்.

  அப்பா எப்போதும் அம்மாவிடம் நட்பாக இருப்பார். அம்மாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருப்பார். அம்மாவின் கதைகளுக்கு ஏதாவது தகவல்கள் தேவைப்பட்டாலும் அப்பா சேகரித்துத் தருவார். நூலகத்தில் இருந்து புத்தகங்கள் கொண்டு வந்து தருவார். சில சமயம் அம்மா, அப்பாவிடம் கதைகள் குறித்து ஆலோசிப்பதுண்டு. என் அம்மாவின் உடன் பிறந்த சகோதரரும் அம்மாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருந்தார். அம்மா நிறைய கட்டுரைகள் கதைகள் எழுதி இருக்கிறார். ‘இலக்கியச் சிந்தனை' அமைப்பு ஆரம்பித்தபோது நடந்த முதல் போட்டியில் அம்மாவின் ‘சிவன் சொத்து' என்ற கதை முதல் பரிசு பெற்றது. அந்த கதையைத் தேர்ந்தெடுத்தவர் அகிலன். ‘பாரத தேவி’, ‘ராஜ்ய லஷ்மி’ போன்ற இதழ்களுக்கும் அம்மா ஆசிரியராக இருந்தார். அம்மா சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர்.

  அம்மாவின் அப்பா மிராசுதார். அம்மாவின் மாமனார் அதாவது என் அப்பா வழி தாத்தா நாடாளுமன்ற உறுப்பினராக‌ இருந்தவர். பிரிட்டிஷ் காலத்தில் தனக்கு வந்த நீதிபதி பதவியையும் நிராகரித்து ராஜினாமா செய்தவர். வசதியானவராக இருந்தபோதும் அம்மா யாரையும் புண்படுத்தும்படி பேசமாட்டார். ஆனால் சொல்ல வந்த தன் கருத்தை எப்போதும் அழுத்தம் திருத்தமாக சொல்லக்கூடியவர். நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சிமலர்’ மிகவும் பிரசித்திப் பெற்ற நாவல். அதற்கு அம்மா தான் அணிந்துரை எழுத வேண்டும் என்று நா. பா. கேட்டுக் கொண்டார்.

  ‘தேவியின் கடிதங்கள்’ என்ற கட்டுரை கல்கியில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அம்மா அதனை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதைத் தொடர வேண்டும் என்று ராஜாஜி விரும்பியதால் அம்மா 64 வாரங்கள் தொடர்ந்து எழுதினார். அதில் பல விஷயங்களை பற்றி விரிவாக எழுதினார். ‘தேவியின் கடிதங்கள்' என்ற இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கினார் ராஜாஜி. ‘கேப்டன் கல்யாணமும்', ‘தேவி யின் கடிதங்கள்' இரண்டும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.

  ஆனந்த விகடனின் வெள்ளிவிழா ஆண்டின்போது நடைபெற்ற சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு மு.வ. போன்ற பெரிய ஆட்கள் நடுவர்களாக இருந்தனர். நடுவர்களில் ஒருவராக அம்மாவும் இருந்தார். பெட்டி பெட்டியாக போட்டிக்கான கதைகள் வரும். யார் எழுதியது என்ற தகவல் எதுவும் இருக்காது. சிவப்பு பென்சில் அதில் வைத்து அனுப்புவார்கள். நடுவர்கள் எல்லாருக்கும் கதைகளை அனுப்புவார்கள். அம்மா அவற்றை பொறுமையாக அமர்ந்து படித்து தேர்ந்தெடுப்பார். அந்தப் போட்டியில் அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி ஆலோசித்து ஜகச்சிற்பியன் மற்றும் ராஜம் கிருஷ்ணனுக்கு நாவலுக்கான பரிசுகளை வழங்கினார்கள்.

  வானொலியில் அம்மா 40 வருடங்கள் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். அதில் பெரும்பாலானவை நேரலை நிகழ்ச்சிகள்தான். அம்மா வானொலி நாடகங்களும் எழுதி இருக்கிறார். அம்மாவின் வானொலி நாடகங்கள் ரொம்ப நன்றாக இருக்கும். ‘மங்கள் மாளிகை’ என்ற ஒரு தொடர் நாடகத்தை குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரத்திற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் பங்கேற்றனர். அதில் அம்மாவும் பங்கேற்றார்.

  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் நூற்றாண்டின்போது அவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் அம்மா புத்தகமாக எழுதியுள்ளார். முத்துலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் வெளியிட்டார். அம்புஜம்மாளின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வெளியிட்டார். பத்திரிகை மற்றும் பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால் அம்மா எங்களிடம் ‘நீங்கள் சின்னப் பிள்ளைகள் தானே உள்ளே போங்கள்’ என்று சொல்ல மாட்டார். எங்களையும் உடன் உட்கார வைத்துக்கொண்டுதான் பேசுவார். அவர்கள் பேசும் இலக்கிய விஷயங்களை நாங்களும் கேட்டுக்கொண்டிருப்போம்.

  அம்மா எழுபது வயதில், வயதான காலத்தில் பி.ஏ. வரலாறு சென்னை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளிப்பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தார். உறவினர் அல்லது தெரிந்த பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் மேலே படி, வேலைக்குப் போ என உந்துதல் கொடுப்பார். உற்சாகப்படுத்துவார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார்.

  சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஔவை டி.கே.சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் அம்மாவின் பங்களிப்பு உண்டு.

  புற்றுநோய் மருத்துவமனையின் ஆரம்ப காலங்களில் அம்மா நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். சென்ற ஆண்டு அம்மாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ‘அமுத சுரபி’ இதழில் அம்மா நினைவாக‌ குறுநாவல் போட்டி வைத்தார்கள். அதில் இறுதிகட்ட நீதிபதிகளாக சிவசங்கரியும் நானும் இருந்து கதைகளை தேர்ந்தெடுத்தோம். அம்மாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓர் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் என் தம்பி அம்மாவின் சாதனைகள் குறித்துப் பேசி இருப்பார்.
   
  shanthinichandra likes this.
   
Loading...
Similar Threads - பெண்களின் மனதை வென்ற
 1. infaa
  Replies:
  179
  Views:
  19,902

Share This Page