Nithya kannaiyan - என் கனவு நீதானே - story thread

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Nithya Kannaiyan, Sep 5, 2018.

 1. Nithya Kannaiyan

  Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  235
  Likes Received:
  4,403
  Trophy Points:
  113
   
 2. Nithya Kannaiyan

  Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  235
  Likes Received:
  4,403
  Trophy Points:
  113
  என் கனவு நீதானே 1

  விட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த சீலிங் ஃபேனின் காற்றில் லேசாக முடிகள் களைந்து பூனையின் முடிகளைப் போன்ற குட்டி குட்டியான முடிகள் முன் நெற்றியில் பரவ, ஒருக்களித்து தலையணையில் ஒருபக்க கன்னத்தை புதைத்து மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த மிதுனாவின் உறக்கம், அவளது அறையின் வெளியிலிருந்து கேட்ட அழுகையின் ஒலியினால் கலைந்தது.

  லேசாக தூக்கக்கலக்கத்தில் மெத்தையில் புரண்டவள், வெளியில் கேட்ட அழுகையின் அளவு கூடிக்கொண்டே சென்றதால் தனது நீண்ட நயனங்களை விரித்தவள், கண்களை ஒரு கையால் கசக்கியவாறே மெத்தையில் எழுந்து அமர்ந்தாள்.

  திறந்திருந்த சன்னலின் வழியே வந்த குளிர்காற்று அவளின் முகத்தைத் தழுவியது. ஜீல்லென்ற காற்று முகத்தில் மோத ஆழ ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டாள்.

  இதழில் தோன்றிய புன்னகையுடன் மெத்தையிலிருந்து இறங்கியவள், தனது இரவு உடையைப் பார்த்தாள்.

  தூக்கத்தில் கலைந்திருந்த உடையை சரி செய்தவள் உதட்டில் உறைந்த புன்னகையுடன் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

  அங்கே மிதுனாவின் அக்கா அனிதா, அவளுடைய இரண்டு வயது மகன் சரணின் அழுகையை நிறுத்த, அவனைத் தூக்கிக்கொண்டு தோளில் தட்டிக் கொடுத்தவாறே ஹாலில் நடந்துகொண்டிருந்தாள்.

  காலையிலிருந்து அவனது பின்னோடு அலைந்து, வீட்டு வேலைகள் செய்து, அவளது கணவன் அருணை பைனான்சிற்கும், தன்னை அலுவலகத்திற்கும் அனுப்பி, மாலையில் திரும்பும் அவர்களுக்கு ஏதாவது சிற்றுண்டி தயாரித்து என மிகவும் கலைத்துப்போய் சோர்வுடன் காணப்பட்டாள்.

  அக்காவிற்கு காலையிலும் மாலையிலும் ஏதாவது உதவிகள் செய்தாலும், அவளது வேலைகள்தான் குறைந்தபாடாய் இல்லை.

  மிதுனா மற்றும் அனிதாவின் தந்தை ஈஸ்வர் தனது பேரனைப் பார்த்துக் கொண்டாளும், அவரது வயதின் காரணமாக பேரனின் ஓட்டத்திற்கு இணையாக அவரால் ஓட முடியவில்லை.

  'உங்களோட அம்மா மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தா, இவனோட சேட்டையெல்லாம் பார்த்து பூரிச்சு போயிருப்பா' என்று கண்கள் கலங்க அவ்வப்பொழுது அவர் கூறுவது உண்டு.

  ஹாலில் நடந்து கொண்டிருந்த அனிதாவின் அருகே சென்றவள், "என்னக்கா.. எழுந்துருச்சு அழறானா" என்றாள் மிதுனா.

  "இங்க கொடு" என அவனை வாங்க கை நீட்டியவளிடம்,

  "இல்லைடி.. வேணாம்.. நீ போய் தூங்கு.. நாளைக்கு வேலைக்கு வேற போகனும்ல.. இல்லைனா அங்கபோய் தூங்கி வழிஞ்சுறுவ.."

  "அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்" என்று கெத்தாக கூறியவள், அக்காவின் தோளிலிருந்த சரணை எடுத்துத் தன் தோளில் சாய்த்தவாறு அணைத்துக் கொண்டாள்.

  "மாமா தூங்கறாரா அக்கா"

  "ஆமாண்டி.. இன்னைக்கு வேலை ரொம்ப அதிகமாம்.. ரொம்ப அசந்து தூங்குனாறு.. அதான் இவனை வெளிய தூக்கிட்டு வந்துட்டேன்.. சாரிடி பாப்பு.. உன்னோட தூக்கத்தை கெடுத்துட்டேனா"

  "அதெல்லாம் இல்லக்கா.. ஆமா உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது.. இவனை சாயந்தரமா தூங்கவிடாதனு.. அதான் இப்படி நடுராத்திரில எழுந்து அழறான்" என்று அக்காவிற்கு ஒரு கொட்டு வைத்தாள்.

  "நா என்னடி பண்றது.. தூங்கி விழறவன தூங்காதனா சொல்ல முடியும்.."

  "ஆமா இதெல்லாம் நல்லாப் பேசு.. ஒரு சின்னப் பையன் அழுகைய நிறுத்தத் தெரில" என்றாள் மிதுனா.

  "நா என்னடி பண்ணேன்.. உங்கிட்ட வந்த உடனே பையன் அமைதியாகிட்டான்.. இவனை காலையில் இருந்து கட்டி மேய்கறதுக்குள்ள என் உசுரே போயிருச்சு" என்று பெருமூச்சு விட்டாள் அனிதா.

  "சரி சரி.. நீ போய் தூங்கு.. இவனை நா இன்னைக்கு என்னோட ரூம்ல தூங்க வைக்கிறேன்" என அக்காவிடம் சொல்லி அவளை அவளுடைய ரூமிற்கு அனுப்பியவள், சரணைத் தூக்கியவாறே தனது அறைக்குள் நுழைந்தாள்.

  அறையில் நுழைந்தவள் அவனை மெத்தையில் கிடத்த, அதுவரை அமைதியாக இருந்தவன் மீண்டும் சினுங்கத் தொடங்கினான்.

  "ம்க்கும்.. ம்க்கும்... ம்மா.. ம்மா"

  "ஸ்ஸ்சுசு... சரண் கண்ணா.. இங்க பாருங்க.. சித்தி இங்கதான் இருக்கேன் தூங்குங்க" என அவனை தட்டிக் கொடுத்தவாறே அருகில் மெத்தையில் அமர்ந்தாள்.

  "சிச்சி" என மழலையில் அழைத்தான் சரண்.

  "என்னடா கண்ணா.. தூங்கலாமா.. தூங்குங்க..சித்தி இங்க உங்க பக்கத்துலயேதான் இருக்கேன்" என்று தட்டிக் கொடுத்தவாறே அவனுடன் பேசிக்கொண்டே இருக்க சிணுங்கலை நிறுத்தியவன் மெல்ல தூங்கத் தொடங்கினான்.

  எழுந்து கதவை மூடிவிட்டு வந்தவள், சரணின் ஒருபுறம் தலையணையை வைத்தவள் மறுபுறம் அவனை அணைத்தவாறே படுத்துக்கொண்டாள்.

  கண்களை மூடியவளுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை.. சரணை ஹாஸ்பிடலில் முதன்முறையாக பிறந்த குழந்தையாய் கைகளில் வாங்கியதுதான் நினைவிற்கு வந்தது.

  மிதுனாவின் குடும்பம் நடுத்தரக் குடும்பம்தான். அம்மா, அப்பா, இரண்டு பெண் குழந்தைகள் என மகிழ்ச்சியான குடும்பம்.

  மிதுனா பிறந்தது ஊட்டி என்றாலும், அவர்கள் குடும்பம் வசித்தது என்னவோ சென்னைதான்.

  அனிதா பிறந்தபின் ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவள்தான் மிதுனா. அதனால் அக்கா தங்கை இருவருக்கும் என்றுமே சண்டை வந்ததில்லை.

  அனிதா எப்பொழுதும் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவள் என்றாள், மிதுனா எதன் மீதும் எளிதில் ஆசை கொள்ளா ரகம்.

  அதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை என்பது இதுவரை வந்ததில்லை. இருவரில் யார் செய்வதாவது மற்றவருக்கு பிடிக்கவில்லை எனில் அதை சொல்லி திட்டுவார்களே தவிர சண்டை போடவே மாட்டார்கள். அதில் அவர்களைப் பெற்றவர்களுக்கு அளவு கடந்த பெருமை.

  மூன்று படுக்கையறை, சமையலறை, ஹால், பூஜையறையுடன் கூடிய மாடிவீடுதான் அவர்களது வீடு.

  மிதுனாவிற்கு தனியறை என்றபோதிலும், அவளது உடைகளை எடுக்க மட்டுமே அவள் அவளுடைய அறைக்குச் செல்வாள். மற்றபடி அவள் இருப்பது எல்லாமே அவளுடைய அக்கா அனிதாவின் அறையில்தான்.

  மிதுனாவின் 12 வயதின்போதே அவளது தாய் தவறிவிட்டார். அதன்பின் அவளின் அக்கா அனிதாவே அவளுக்கு அனைத்துமாக ஆகிப்போனாள்.

  அவர்களது தந்தைக்கு இவர்கள் இருவருமே உலகமாகிப் போனார்கள். காலையில் இவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்பவர் இவர்களை விட்டுவிட்டு, அவருடைய ஆசிரியர் வேலையை செய்பவர் மாலையில் இவர்களை அழைத்துக் கொண்டே வீட்டிற்கு வருவார்.

  இவர்களது உலகில் இவர்கள் மூவரைத் தவிர வேறு யாருக்கும் அங்கே இடமில்லை.

  வெளியிடங்களுக்குச் சென்றாளும் அவ்வளவு எளிதாக யாருடனும் பழகிவிட மாட்டாள் மிதுனா. அதுவும் ஆண்கள் இருக்கிறார்கள் என்றாள் அந்த திசைப் பக்கமே திரும்ப மாட்டாள்.

  அன்னை இல்லாத அக்காவின் வளர்ப்போ, இல்லை அவள் படித்த பள்ளியின் கட்டுப்பாடுகளோ மிதுனா குறைகளற்ற தங்கமாய் இருந்தாள்.

  அனிதாவின் 21வது வயதில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார் ஈஸ்வர். அப்பொழுது மிதுனாவின் வயது 16.

  ஒரு வகையில் தூரத்து சொந்தமான அருணை, ஈஸ்வர் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தபோது மிதுனா மிகவும் உற்சாகமாக தலையாட்டினாள்.

  அதற்குக் காரணம் பெண் பார்க்க வந்தபொழுது அவளை பாசத்துடன் பார்த்தவன், பாப்பா என்று அழைத்த முதல் அழைப்பு.. அது அவளின் தாயின் அழைப்பு..

  இரண்டாவது அருணிற்கு குடும்பம் என்று பெரிதாக எதுவுமில்லை. தாய் தந்தையற்ற அவரை அவரின் பெரியப்பாதான் எடுத்து வளர்த்தார்களாம்.

  அதனால் திருமணத்திற்குப் பின்னர் அவர்கள் இங்கேயே இரண்டு வீடு தள்ளி குடி வந்தால், தன்னுடைய அக்கா தன்னுடனே இருப்பாள் என்று சந்தோசமாக தலையாட்டினாள்.

  திருமணத்திற்குப்பின் அவர்கள் இவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வாடகை வீடொன்று எடுத்து இங்கேயே இருந்ததால், மிதுனாவிற்கு ஒன்றும் பெரிதாக வித்தியாசமாக தெரியவில்லை.

  காலையில் 8 மணிக்கு மாமா அவர் பைனான்சிற்கு சென்றுவிட்டாள், அக்கா நேராக இங்கே வந்துவிடுவாள். அதன் பின்னர் மாலைவரை இங்கேயே இருந்துவிட்டு இரவு அருண் வந்தவுடன் இரவு உணவை இங்கேயே அனைவரும் சேர்ந்து உண்டுவிட்டு அனிதாவும் அருணும் அவர்களின் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

  மிதுனா பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றபொழுதும் இந்தப் பழக்கம் மாறவில்லை.

  இப்படியாக இரண்டரை வருடங்கள் கழிய, அப்பொழுதுதான் அந்த மகிழ்ச்சியான தகவல் கிடைத்தது. அவள் அக்கா அனிதா மாசமாக இருப்பது.

  அவளின் கால் தரையில் படாமல் அனைவரும் பார்த்துக் கொண்டனர். அக்காவை தனியா விட்டுட்டு இருக்கமாட்டேன் என மிதுனா பண்ணிய ஆர்பாட்டத்தில் அவர்கள் வாடகை இருந்த வீட்டை காலி செய்துவிட்டு ஈஸ்வரின் வீட்டிற்கே வந்துவிட்டனர்.

  அப்பாவும், மிதுனாவும் அக்காவிற்கு இது பிடித்தது, இது நல்லது என எதாவது சாப்பிட செய்து கொடுத்துக்கொண்டே இருக்க, அருணோ தினமும் எதையாவது சாப்பிடுவதற்கோ, இல்லை துணிகளோ அனைவருக்குமே வாங்கிவந்து விடுவான். இது போதாது என தினமும் வாக்கிங் போக வேண்டும் என அவளது குடும்பமே அருகிலுள்ள பார்க்கிற்கு மாலையானால் நடை பயற்சிக்கு கிளம்பிவிடும்.

  இவர்கள் பண்ணிய அலப்பறையில் அனிதாதான் தலையில் அடித்துக் கொண்டாள்.

  குழந்தை பிறந்தபொழுது நான்தான் முதல்ல வாங்குவேன் என அடம்பிடித்து முதன்முதலில் அவனை கையில் வாங்கியதும் நம்ம மிதுனாவே.. அவனுக்கு பெயர் செலக்ட் செய்ததும் நம்ம நாயகி மிதுனாவே.

  ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்ததும் இன்னும் அதிகமாகவே சரணையும், அனிதாவையும் கவனித்துக் கொண்டனர்.

  காலேஜ் நேரம் தவிர மிதுனா சரணுடனே இருந்தாள். அவனை விட்டு நகரவே இல்லை.

  இவ்வாறு இருக்க அருணின் பைனான்சில் ஏற்பட்ட பிரச்சனையால் அவன் ஹைட்ராபாத்திற்கு மாறவேண்டிய நிலை ஏற்பட்டது.

  அக்காவை விட்டுட்டு எப்படி இருப்பேன் என அழுது கரைந்தவளை அனிதா தான் சமாதானப்படுத்தினாள்.

  "என்னடி இது குழந்தையாட்டம்.. உனக்கு லீவ் விட்ட உடனே அப்பாவும், நீயும் அங்க வந்துருங்க.. லீவ் முடியறவரை நீ அங்கயே இருக்கலாம்.. அக்காவும் மாச மாசம் இங்க வரேன் சரியா.. நீயே அழுதா எப்படிடா.. அப்பாவ இனிமேல் நீதான பாத்துக்கனும்.." என ஒருவழியாக சமாதானப் படுத்திவிட்டு கணவனுடனும் தனது 6 மாத குழந்தையுடனும் ஹைட்ராபாத் வந்துவிட்டாள் அனிதா.

  லீவிற்கு அக்கா வீட்டிற்கு செல்வது, பின்பு சென்னையிலுள்ள தனது கல்லூரிக்கு செல்வது என ஒரு வழியாக படிப்பை முடித்தாள் மிதுனா.. படித்து முடித்த கையுடன் சென்னையில் புகழ் பெற்ற சாப்ட்வேர் கம்பெனியில் ஒரு வேலையும் பெற்றுவிட்டாள் மிதுனா.

  அவள் வேலைக்குச் சென்றவுடன் அப்பாவை வேலைக்கு செல்ல விடவில்லை.

  "என்னால வீட்டுலயே இருக்க முடியாதுமா" என்று கெஞ்சியவரிடம்

  "அதெல்லாம் எனக்குத் தெரியாது" என்று கூறியவள், அவரை யோகா கிளாசில் சேர்த்து விட்டாள்.

  "உன்னோட அலப்பறைய தாங்கவே முடியல போ" என அவர்தான் சலித்துக் கொண்டார். காலையில் எழுந்து இவளுக்கு சமைத்துக் கொடுத்து அலுவலகம் அனுப்பும் வரை அவர் பாடுதான் திண்டாட்டமாக இருக்கும்.

  சமையல் வேலை எதுவும் தெரியாத மிதுனா உதவி பண்ணுகிறேன் பேர்வழி என ஒரு வேலையை மூன்று வேலையாக்காமல் சமையலறையை விட்டு வெளியேறமாட்டாள்.

  இவள் அலுவலகம் சென்றவுடன் சமையலறையை சுத்தம் செய்வதே அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

  சிறிது நேரம் ஓய்வெடுப்பவர், தனது யோகா கிளாசிற்கு கிளம்பிச் செல்வார்.

  வீட்டில் இவ்வளவு தொல்லை செய்யும் மிதுனா, வெளியில் குனிந்த தலை நிமிரமாட்டாள். யாருடனும் எளிதில் பழகிவிட மாட்டாள். அவளுடைய நட்புகளும் ஒன்று இரண்டு என விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருக்கும்.

  மாலையில் வீட்டிற்கு வருபவள் அன்றைய நாளில் நடந்தது அனைத்தையும் தந்தைக்கு ஒன்றுவிடாமல் ஹாலில் அள்ள சோபாவில் அமரந்தவாறே சொல்லிவிடுவாள். அவரும் பொறுமையாக அவள் கூறுவதையெல்லாம் கேட்டுக் கொள்வார்.

  இவர் கவனம் அவள் பேச்சில் இல்லையென அவள் தெரிந்துகொண்டால் அவ்வளவுதான், அன்று இரவு அவளை சாப்பிட வைப்பதற்குள் அவர் திணறிப் போய்விடுவார்.

  அதனாலேயே அவள் என்ன சொன்னாலும் 'உம்' கொட்டி கேட்டுக் கொள்வார் ஈஸ்வர். 'இவளது வருங்காலக் கணவனும் அருணைப் போல அமைதியானவராய் அமைய வேண்டுமே' என இவர் கடவுளிடம் வேண்டிக் கொள்வார்.

  - தொடரும்.
   
   
 3. Nithya Kannaiyan

  Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  235
  Likes Received:
  4,403
  Trophy Points:
  113
  அத்தியாயம் 2

  ஒருவருடம் சென்னையில் வேலை செய்த மிதுனா, அவளுடைய கம்பெனி ஹைட்ராபாத்தில் ஒரு பிரேன்ஜ் தொடங்கவும், ஹைட்ராபாத்திற்கு டிரான்ஸ்பர் அப்ளிகேசனைப் போட்டுவிட்டாள்.

  அன்று மாலை வழக்கம்போல ஹால் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தந்தையிடம் கேட்டாள் "அப்பா டிரான்ஸ்பர் கிடைக்கும்தானப்பா.."

  "கிடைக்கும்மா"

  "கண்டிப்பா கிடைச்சுருமா அப்பா"

  "கண்டிப்பா கிடைச்சுரும்டா"

  "நிஜமா"

  'கடவுளே' என தலையில் கை வைத்தவர் "அப்பாவ பார்த்தா பாவமா இல்லையாமா" என்றார் பாவமாக.

  "இல்லை " என அசால்டாக கூறியவள்,

  "சொல்லுங்கப்பா.. கண்டிப்பா ஹைட்ராபாத்துக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்தானே.. அப்படி கிடைச்சுருச்சுனா அங்க அக்கா வீட்டுக்கு பக்கத்துலயே வீடு எடுத்துக்கலாம்பா.. இனிமே ஒன்னாவே இருக்கலாம்.. ஜாலி" என சோபாவில் ஏறிக் குதித்தவளை மகிழ்ச்சியுடன் பார்த்தவர், இவளுக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கவேண்டும் என நினைத்துக் கொண்டார்.

  ஒருவழியாக இவளுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவும், ஹைட்ராபாத்திற்கு வந்தவர்கள், அருணின் வீட்டிற்கு அருகிலேயே வீடு பார்க்க, அருண் அதனை மறுத்துவிட்டான்.

  "வேண்டாம் மாமா.. இன்னும் கொஞ்ச நாள்ல பாப்புக்கும் மாப்பிள்ளை பாக்கத் தொடங்கலாம்.. அதுக்கு அப்புறம் நீங்க இங்கதான இருக்கனும்.. அதுனால இப்பயிருந்தே இங்கயே இருங்க.. பாப்புக்கும் கொஞ்ச நாள் அவ அக்காவோட இருந்த மாதிரி இருக்கும்.. அதோட வீடும் நல்ல பெரிய வீடுதான.. ஒரு பிரச்சனையும் இல்லை" என அதையும் இதையும் கூறி அவர்களை இங்கேயே தங்கவைத்துவிட்டான்.

  மீண்டும் அனைவரும் ஒரே குடும்பமாய் இருப்பதில் மிதுனாவிற்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை.

  ஒருவாரம் வீட்டையே சுற்றி வந்தவள் அதன் பின்தான் கம்பெனியில் ஜாயின் செய்தாள். அவர்கள் இங்கே வந்து 6 மாதம் ஆகிவிட்டது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவள் தன்னையும் அறியாமலேயே உறங்கத் தொடங்கிவிட்டாள்.

  காலையில் ஜன்னலின் வழியே வந்த சூரியவெளிச்சம் முகத்தில் சுள்ளென அடிக்க, புருவங்களையும் கண்களையும் சுருக்கியவாறே எழுந்து அமர்ந்து மணி பார்த்தாள் மிதுனா.

  "மணி 6.30 a.m" என காட்டியது அழகிய கருமைநிற டிஜிட்டல் கடிகாரம்.

  "ஆஆவ்வ்" என ஒரு கொட்டாவியை கையால் வாயை மூடியவாறே வெறியேற்றியவள், மெத்தையிலிருந்து எழுந்து சரணின் மறுபுறமும் தலையணையை முட்டுக்கொடுத்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

  சில்லென்ற தண்ணீரில் முகத்தை அடித்துக் கழுவியவள், ராஜா ராணி நஸ்ரியாவைப் போல 'ஈஈஈ' என பல்லைக் காட்டி அழகு பார்த்தவாறே பிரஸ்ஸில் பேஸ்ட்டை வைத்து பல் தேய்த்தாள்.

  மீண்டும் ஒருமுறை முகத்தை கழுவியவள், துண்டால் முகத்தை துடைத்தவாறே கண்ணாடியைப் பார்த்தாள்.

  பால்வண்ணம் என்று சொல்லும் அளவிற்கு வெள்ளை வெளேறென இருந்தாள். 'ச்சை எதுக்குத்தான் இம்புட்டு கலரோ தெரியல... அதனாலதான் அம்புட்டுப் பேரும் முறைச்சு முறைச்சு பாக்குறாங்க' தன்னை அனைவரும் சைட் அடிப்பதை முறைத்துப் பார்ப்பதாய் நினைத்துக்கொண்ட குழந்தை புலம்பியது.

  பிறை நெற்றியின் கீழே இயற்கையிலேயே வளைந்த புருவங்கள், அவள் பியூட்டி பார்லர் செல்வதில்லை என சத்தியம் செய்து கூறினாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

  "இதென்ன மலை மாதிரி ஏறி இறங்குது" என இவளின் வளைந்த புருவங்களைப் பார்த்து பொறாமையுடன் கூறிய சுஜிதாவை நினைத்தவள், ஒரு விரலால் புருவங்களை வளைத்துப்பார்த்தாள்.

  "அப்படியே நில்லு பாக்கலாம்" என்று அதனுடன் பேச்சு வார்த்தை நடத்தினாள் மிதுனா.

  பாலில் மிதக்கும் கருவிழிகள் அல்லாமல் பிரௌன் நிற விழிகளைக் கொண்டவள். அவள் விழிகளைக் கண்டு இதுவரை மயங்காதவர்கள் ஆணோ பெண்ணோ எவரும் இல்லை என்ற உண்மை அறியாதவளாய் "யப்பா.. இப்படி ஒரு கண்ணாடி உனக்கு.. நைட்ல பாத்துட்டு நானே எத்தனை தடவை பயந்துட்டேன் தெரியுமா.. யாருகிட்டயும் சொல்லவும் முடியாது.. சொன்னா இதைவிட அசிங்கம் உனக்கு வேற எதுவுமே இல்லைடி" என கூர்மையான கத்தியினைப் போன்ற மூக்கின் கீழே உள்ள இயற்கையிலேயே சிவந்த கோவைப்பழ உதடுகளைப் பிதுக்கிக் கொண்டாள்.

  அதில் அவளது கன்னத்தின் குழி அவளை இன்னும் அழகாக்கிக் காட்டியது.

  நீண்ட கழுத்து.. அவள் தலையைத் திருப்பி பார்க்கும் போது, மயில் தன் தலையைத் திருப்பி ஒய்யாரமாக பார்ப்பதைப் போல இருக்கும்.. ஒல்லியான உடல்வாகு..

  தன்னை இரு நிமிடங்கள் ஆராய்ச்சி செய்தவள் "ஏதோ பாக்குற மாதிரி இருக்க" என தனக்குத் தானே கூறிக்கொண்டாள் அனைவரையும் நொடியில் தன் அழகால் ஈர்த்துவிடும் மயக்கும் மோகினி.

  பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவள் டேபிளின் மேலிருந்த கிளிப்பை எடுத்து கொண்டை போட்டவள் ''ம்ப்ச்'' என கடுப்பானாள்.

  அவளின் கூந்தல் நன்கு வழுவழுப்பாக கருப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில் இடையைத் தாண்டி தொங்கும். அதை கொண்டை போடுகையில் குட்டி குட்டியான பாதி முடிகள் முன்நெற்றியிலும், காதோரத்திலும், பின்கழுத்தோரத்திலும் தொங்கும்.

  எப்பொழுதும் போல கடுப்பானவள் "எப்படியோ போய்த்தொலை" என டீலில் விட்டுவிட்டு கதவைத் திறந்துகொண்டு ஹாலிற்கு வந்தாள்.

  அங்கே ஹாலில் கண்ட காட்சியில் வாவ் என தனது சிவந்த இதழ்களை அழகாய்க் குவித்தாள்.

  ஆனால் அதன் அழகை ரசிக்காமல் அவளை முறைத்தனர் அவளது தந்தையான ஈஸ்வர் மற்றும் அவளது செல்ல மாமா அருண்.

  எதற்காகவா.. சோபாவில் அடுத்தடுத்து அமர்ந்துகொண்டு கண்ணீர் சிந்தியவாறே ஈஸ்வர் பெரிய வெங்காயத்தின் தோலை உரித்துக் கொடுக்க, அதை கண்களில் நீர்தேக்கத்தோடு வாங்கி கட் பண்ணிக் கொண்டிருந்தான் அருண்.

  அவர்கள் வீட்டில் இது அடிக்கடி நடப்பதுதான் என்றாலும் மிதுனாவிற்கு அதை ரசிக்காமல் இருக்க முடியாது.

  அவர்களின் அருகே சென்று அவர்கள் உட்கார்ந்திருந்த சோபாவிலேயே சம்மணமிட்டு அமர்ந்தவள், "மாமா வெங்காயத்தை இன்னும் சின்னச் சின்னதா கட் பண்ணனும் மாமா" என இவள் சத்தமாகச் சொல்ல, இவளை முறைத்தவன்,

  கிச்சனிற்குள் இருந்து கேட்ட "என்னங்க" என்ற அனிதாவின் குரலில்,

  "நீ சொன்ன மாதிரிதான்மா கட் பண்ணிட்டு இருக்கேன்" என்றான் பவ்யமாக.

  அடுத்து ஈஸ்வரை மிதுனா திரும்பிப் பார்க்க, அவர் 'வேணாம்மா' என்று இவளைப் பாவமாக பார்த்தார்.

  'சரி சரி பொழைச்சு போங்க' என்பது போல ஒற்றைக் கையால் போ போ என்பதுபோல் செய்தவள், கிச்சனைப் பார்த்து கத்தினாள் "அக்கா... காபி"

  இவள் சொல்லி முடித்ததும் அருகில் இருந்த இருவரும் சத்தம் வராமல் குலுங்கி குலுங்கி சிரித்தனர். அவர்களை விசித்திரமாக பார்த்தவள் "என்ன?" என்றாள் கெத்தாக.

  "ஹையோ.. ஹையோ.. நாங்களும் காபி கேட்டதுக்குத்தான் உங்க அக்கா வெங்காயத்த குடுத்து எங்கள இங்க உக்கார வைச்சுட்டா.. உனக்கு என்னத்த கொடுக்கப்போறாளோ" என அவன் சொல்லி முடிக்கையில் ,

  "இந்தாடி சீக்கிரம் புடி.. எனக்கு கிச்சன்ல வேலையிருக்கு" என்று காபி கப்பை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் அனிதா.

  "ஹிம்ம்" என நிதானமாக தன் முன்னால் இருந்த டீப்பாயின்மேல் கால்களை நீட்டி வைத்தவாறே ஒவ்வொரு மிடராக குடித்தாள் மிதுனா.

  ஈஸ்வரும், அருணும் தன்னை திட்டிக் கொண்டிருப்பதை பார்த்தாலும் பாக்காதவள் போல "காபி சூப்பர்" என்றாள்.

  "இதெல்லாம் அநியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயம்.. உனக்கு ஒரு நியாயமா.. என்ன மாமா" என்றான் அருண் ஆவேசமாக.

  "ஆமாம் மாப்பிள்ளை.. ஆமாம்" தனக்கு காபி கொடுக்கவில்லையே என்ற கவலை அவருக்கு.

  "இப்பவே நா இதை என்னன்னு கேக்கறேன்" என்று வேகமாக எழுந்தவன், கிச்சனுக்குள் இருந்து கேட்ட,

  "இன்னும்மா.. அதை ரெண்டுபேரும் கட் பண்ணிட்டு இருக்கிங்க" என்ற கத்தலில், "இதோ முடுஞ்சுறுச்சுமா.. லாஸ்ட் வெங்காயம்" என்று கட் செய்யத் தொடங்கினான்.

  "ஹா.. ஹா.. ஹா" என கத்தி சிரித்தவாறே கிச்சனிற்குள் சென்றவள், தான் குடித்த கப்பை கழுவியவாறே அக்காவைப் பார்த்தாள். அவள் மும்பரமாக அடுப்பில் எதையோ கிண்டிக்கொண்டிருந்தாள்.

  'பாவம்' என நினைத்தவள், அவர்கள் இருவருக்கும் கப்பில் காபியை ஊற்றியவள், சரணிற்கு பாலில் நாட்டு சர்க்கரையை கலந்து பால்பாட்டிலில் ஊற்றிக்கொண்டு சென்றாள்.

  "இந்தாங்க அப்பா.. எடுத்துக்கோங்க மாமா"என அவர்களிடம் கப்பை நீட்டியவள் உள்ளே செல்லத் திரும்பினாள்.

  "அடடே.. பாப்பு.. அவகிட்ட கேட்டதுக்கு உங்கிட்டயே கேட்டுறுக்கலாம்டா.. வெங்காயம் நறுக்கறதாவது குறைஞ்சுருக்கும்" என்றான் சலிப்புடன் அருண்.

  அவனைத் திரும்பி பார்த்தவள் மர்மமான புன்னகையுடன் கூறினாள், "மாமா.. அக்காவாவது வெங்காயம்தான் கட் பண்ணச் சொன்னா.. நானா இருந்தா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா.. காபி நா போட்டுக்கொடுத்தால் நீங்கதான் டிபன் செய்யனும்னு சொல்லிருப்பேன்" என்றாள் கூலாக.

  "ஹி.. ஹி.. பாப்பு இப்படின்னு உங்க அக்காகிட்டு மட்டும் சொல்லிராதடா தங்கம்.. போமா போ.. போய் சரணை எழுப்பிவிடு.. போ" என்று அவளை அங்கிருந்து துறத்தினான்.

  புன்னகையுடன் அறைக்கு வந்து உறங்கிக் கொண்டிருந்த சரணை எழுப்பியவள், முகத்தை கழுவி பாலைக் கொடுத்தாள்.

  "வேணாம்.. வேணாம்" என மறுத்த குழந்தையிடம்,

  "ஊங்கு குடிச்சிங்கன்னா.. சித்தி இன்னைக்கு உங்களுக்கு சாக்கி வாங்கிட்டு வருவேன்" என சமாதானப்படுத்தி பாலை முழுவதுமாக குடிக்க வைத்து ஈஸ்வரிடம் அவனைக் கொடுத்துவிட்டு வந்து, அலுவலகம் செல்லக் கிளம்பினாள்.

  அரக்கப்பரக்க குளித்துவிட்டு வந்தவள், அலமாரியின் முன்னால் இருந்த ஏதோ ஒரு சுடியை எடுத்து உடுத்திக் கொண்டு, தலை வாரி பின்னினாள். ஆங்காங்கே நெற்றியில் தொங்கிய ஒன்றிரண்டு முடியை ஸ்டைலாக சுருட்டி விடாமல் இழுத்து வைத்து பின்பண்ணினாள்.

  லேசாக பவுடர் அடித்தவள் கருப்பு நிற குட்டிப் பொட்டை இரண்டு புவங்களுக்கு இடையில் வைத்தாள். அவளின் பால்வண்ணத்திற்கு கருப்புப் பொட்டு எடுப்பாக இருந்தது. அவளது பிரௌன் நிற விழிகள் சூரிய வெளிச்சத்தில் வைரம் போல மின்னின.

  உதட்டைப் பிதுக்கியவள் கண்ணாடியில் இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் திரும்பிப் பார்த்தாள். உடை எதுவும் அசிங்கமாக உள்ளதோ, சரியாக உடுத்தியிருக்கிறோமா என்று.

  "ஓ.கே" எனத் தோன்றவும் துப்பட்டாவை எடுத்து தன் நீண்ட கழுத்திலிருந்து இரு தோள்களிலும் பரட விட்டவாறு போட்டாள்.

  ''இப்படி பிளோட்டிங்கா போட்டாதான் எவ்வளவு அழகா இருக்கு இந்த சால்.. இதை விட்டுட்டு மொத்தமா சூருட்டி கழுத்துல போட்டுக்கிட்டு" என எதற்குச் செய்கிறார்கள்.என்று தெரியாமலேயே தனக்குத் தெரிந்ததை வைத்து புலம்பியவாறே, ஹேன்பேக்கில் செல்லை எடுத்து திணித்தவாறே டைனிங்காலிற்கு வந்தாள்.

  அங்கு அப்பா சரணிற்கு ஊட்டிக் கொண்டிருக்க, அருண் வேகவேகமாய் தட்டில் இருப்பதை உள்ளே தள்ளிக் கொண்டிருக்க, அக்கா மாமாவுக்கும் மிதுனாவுக்கும் மதிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டிருந்தாள்.

  "சாரி அக்கா.. லேட் ஆகிருச்சு.."

  "பரவாலடி.. முதல்ல உக்காரு" என்று அவளுக்கு பூரியையும், உருளைக்கிழங்கையும் பரிமாறியவள்,

  "நீதான் சரண்க்கு பால் குடுத்துட்டல.. அதனால எனக்கு பெரிய வேலை ஒன்னு இல்லாமப் போயிருச்சு..மதியத்திக்கு எலுமிச்சை சாப்பாடும், உருளைக்கிழங்கு பொரியலும் வெச்சிருக்கேன்.. முழுசா சாப்பிட்டுறு.. லேட் ஆகிடுச்சு.. சாப்பிட டைம் பத்தலனு சொல்லிட்டு இருக்காத"

  "சரிக்கா" என்றவள், மூன்று பூரியை சாப்பிட்டுவிட்டு கை கழுவி வந்து, டிபன்பாக்ஸை தனது ஹேன்பாக்கிற்குள் திணித்தாள்.

  "பாய்க்கா"

  "பாய்டி" அனிதா.

  "பாய் மாமா.. பாய் அப்பா.. பாய்டா கண்ணா" என்றவள் குனிந்த டைனிங் டேபிளின்மேல் உட்கார்ந்திருந்த சரணின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

  "சிச்சி.. சாக்கி" என்று தன்னுடைய விஷயத்தை மறக்காமல் ஞாபகப்படுத்தினான் சரண்.

  "சரிடா கண்ணா.. சித்தி சாயந்திரம் வரும்போது வாங்கிட்டு வரேன்.. சித்திக்கு ஒரு உம்மா கொடுங்க" என்று கேட்டவளின் கழுத்தை கட்டிக்கொண்டு அவளின் இரு கன்னத்திலும் முத்தமிட்டான் சரண்.

  "பாய் சிச்சி"

  "பாய்" என்றவள் தங்களது வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள பஸ்டாப்பிற்கு வரும் கம்பெனி பஸ்ஸை பிடிக்க ஓடினாள்.


  - தொடரும் .
   
   
 4. sai

  sai Bronze Wings New wings

  Messages:
  531
  Likes Received:
  581
  Trophy Points:
  113
   
 5. Nithya Kannaiyan

  Nithya Kannaiyan Bronze Wings New wings LW WRITER

  Messages:
  235
  Likes Received:
  4,403
  Trophy Points:
  113
  அத்தியாயம் 3

  கம்பெனி பஸ்ஸில் அலுவலகத்தை அடைந்த மிதுனா தனக்காக கேட்டின் அருகே நின்றுகொண்டிருந்த பூஜாவிடம் சென்றாள்.

  பூஜா தெலுங்குப் பெண். மிதுனா இந்த கம்பெனியில் ஜாயின் செய்தபோது வலிய வந்து இவளிடம் பேசியவள்.

  யாரிடமும் ஒட்டாத குணத்தினால், முதல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவள் பின்பு அவளுடன் பழக ஆரம்பித்துவிட்டாள். அதற்குக் காரணம் பூஜா எதையும் முகத்தில் அடித்தது போல் சொல்லிவிடுவாள்.

  அவளுக்கு மறைத்துப் பேசும் பழக்கம் கிடையாது. அதனாலேயே அவளுக்கு பூஜாவை மிகவும் பிடித்தது.

  "சாரி பூஜா.. ரொம்ப நேரமா நிக்கறயா"

  "ஆமாடி.. பட் நீ பீல் பண்ணாத.. இந்த டைம்ல சூப்பரா நாலு பிகர சைட் அடிச்சுட்டேன்"

  "ச்சூ.. இப்படியெல்லாம் பேசக்கூடாதுனு உங்கிட்ட எத்தனை தடவை பூஜா சொல்றது"

  "ஏன்.. ஏன்.. பசங்க மட்டும்தான் நம்மள பாக்கனும்னு ரூல்ஸ் இருக்கா.. அழகுனு இருந்தா எல்லாரும் ரசிக்கதான் செய்வாங்க.. நீதான் பசங்க அங்க வந்தாலே இங்க நிலத்த பாக்க ஆரம்பிச்சுருவ.. என்னையும் அப்படி இருக்க சொல்லாதடி பிளீஸ்" என கையெடுத்துக் கும்பிட்டாள்.

  பூஜா அப்படித்தான். அவள் சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை என நினைப்பவள். அவளின் நட்பு வட்டாரம் மிகப்பெரிது.

  ஆனாலும் அவள் மிதுனாவுடன் கொண்ட நெருக்கம் வேறு யாருடனும் இல்லை எனக் கூறுவாள்.

  'உன்னை மாதிரியே எல்லாரும் இருக்க மாட்டாங்கடி.. அவங்களுக்குத் தேவைனா வந்து பழகுவாங்க.. தேவை முடிஞ்சா கழட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பாங்க.. அதுதான் இந்த உலகம்' என தத்துவமாய் கூறுவாள் பூஜா.

  'அவளின் தோழமையை நிறைய பேர் பயன்படுத்திக் கொண்டார்கள் போல' என நினைத்துக் கொள்வாள் மிதுனா. அதனாலேயே அவள் மிதுனாவுடன் மட்டுமே நெருக்கமாகப் பழகினாள்.

  ஆனால் பேச்சில் அவளை மிஞ்ச யாரும் இல்லை. அதே போல் கலகலப்பானவள்.துறுதுறுப்பான விளையாட்டு குணம்.

  "அப்படியே எங்க சரண் மாதிரியே இருக்க பூஜா" என்று அவளின் விளையாட்டைப் பார்த்து மிதுனாவும் அடிக்கடி கூறுவாள். அதற்கு அவள் தலையை சரித்து நக்கலாகப் பார்ப்பாள். அதன் அர்த்தம் 'நீயும் எப்பேர்பட்ட ஆளுனு எனக்குத் தெரியும் என்பதாகும்'.

  பூஜாவின் கையைப் பிடித்தவள், "பேசுனது போதும்.. உள்ளே போலாம் வா" என இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

  அவர்கள் உள்ளே நுழைகையிலேயே "ஹாய் பூஜா" என விஸ் பண்ணியவாறே அருகில் வந்தனர் சிலர்.

  அவளுக்குத் தெரியும் இது தனக்காக சொல்லப்பட்ட ஹாய் இல்லையென. இது மிதுனாவிற்காக சொல்லப்பட்டது.

  அதை அவளிடம் சொன்னால் அவள் காது கேட்காதவள் போல் சென்றுவிடுவாள். மிதுனா ஜாயின் செய்த புதிதில் பூஜாவே கண்டிருக்கிறாள். அவளுடன் பேச வருபவர்களை நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் கடக்கும் விதம்.

  அதனாலேயே மிதுனா அருகிலிருந்தாள் அவள் எந்த ஆண்களுடனும் நின்று பேச மாட்டாள். அதேபோலவே இப்பொழுதும் டிரை செய்த ஒன்றிருவரையும் "பாய்" என துரத்திவிட்டாள் பூஜா.

  அங்கே உள்ள ஜடென்டி மிஷினில் ஜ.டி கார்டை பன்ச் செய்தவர்கள் உள்ளே திரும்பினர்.

  மிதுனாவை சைட் அடித்தவாறே மூன்று பேர் நின்றுகொண்டிருந்தனர்.

  "ஏய்.. அந்த மூணு குரங்குகளும் நிக்குதுங்கடி"

  "சும்மா இரு" என்றவள், பூஜாவின் கையை பிடித்துக்கொண்டு தலையை குனிந்தவாறே அங்கிருந்து உள்ளே அவர்களின் கேபினிற்கு வந்துவிட்டாள்.

  அவர்களின் அலுவலகத்தில் ஒவ்வொரு தளத்திலும் ரூம்கள் கண்ணாடியால் தடுக்கப்பட்டு கேபினாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு கேபினில் இரண்டு அல்லது மூன்று டீம்கள் வேலை செய்வர்.

  "பாவம்டி அவனுங்க.. நீயும் இங்க ஜாயின் பண்ணதுல இருந்து ஜொள்ளு மழையை பொழியறாங்க.. நீதான் கண்டுக்கவே மாட்டிங்கற.."

  "பூஜா.. அடிச்சுறுவேன்" அவளை மிரட்டியவாறே சீட்டில் அமர்ந்தாள் மிதுனா.

  "என்னா.. ஆ.. ஊன்னா.. இதையொன்ன சொல்லிரு" என்றவள் பேசியவாறே தனது சீட்டில் உட்கார்ந்து சிஸ்டமை ஆன் செய்தாள்.

  "ஓ.கே.. பேசுனது போதும்.. நா நேத்து பாதில விட்ட புரோகிராம்ம கம்ளீட் பண்ணுறேன்" என்றவள் சிஸ்டமிற்குள் தலையை நுழைத்துக் கொண்டாள்.

  அவளைத் திரும்பிப் பார்த்தாள் பூஜா. இனி இடியே விழுந்தாலும் அவள் வேலையை முடிக்கும்வரை திரும்பமாட்டாள் என்பது தெரிந்ததால், தனது கம்பியூட்டரை தட்ட ஆரம்பித்தாள்.

  அவ்வப்பொழுது அவளுடன் கேபினிற்குள் இருக்கும் பெண்கள் யாரேனும் வந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பர். இவர்கள் சத்தத்தில் கவனம் கலையும் மிதுனாவும், எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்து புன்னகைப்பாள்.

  அவர்கள் கேபினிற்குள் இருக்கும் அனைவருக்கும் மிதுனாவை மிகவும் பிடிக்கும். அழகான, அடக்கமான, அமைதியான பெண் என நினைத்துக் கொண்டனர்.

  "யாரு மிதுனாவா.. பாவம் அந்தப் பிள்ளை வாயத்தெறந்து பேசக்கூட யோசிக்கும்பா" அவளைப் பற்றி எதையேனும் கிளப்பிவிட முயற்சி செய்தாலும் அது புஸ்வானமாய்ப் போய்விடும்.

  மதிய உணவு இடைவெளியில் அவளை கஷ்டப்பட்டு சிஸ்டத்திடமிருந்து பிரித்து வொர்க்கர்ஸ் டைனிங்ஹாலிற்கு அழைத்துச் சென்றாள் பூஜா.

  அங்கேயுள்ள நீண்ட டேபிளில் அமர்ந்துதான் அனைவரும் உண்பர். லேடிசிற்குத் தனியாக, ஜென்சிற்குத் தனியாக என இரண்டு அறைகள் உள்ளது.

  "உன்னோட பெரும் இம்சையா இருக்குடி" என்றாள் பூஜா தனது டிபன் பாக்ஸை திறந்தவாறே.

  "இதையே எத்தனை தடவைதான் சொல்லுவ" என்றாள் மிதுனா. அவளின் டிபனின் மூடியில் பாதி உணவையும், உருளைக்கிழங்கு பொரியலையும் வைத்து பூஜாவிடம் தள்ளியவள், அவளின் சாதத்தில் பாதியை எடுத்துக் கொண்டாள்.

  "என்னைக்கு நீ என்னை சாப்பிட கூப்பிடறயோ அதுவரை.. மணி 1 ஆகிடுச்சுனா பசி வயித்தக் கிள்ளுது.. உன்னை இழுத்துட்டு வரதுக்குள்ள எனக்கு மயக்கமே வந்துடும்போல.." என்றாள் உருளைக்கிழங்கு பொரியலை சப்புக்கொட்டி சாப்பிட்டவாறே.

  "விடு.. விடு.. நாளைக்கு நான்தான் உன்னை சாப்பிட கூப்பிடப் போறேன்.." என்றாள் வாயில் நிரம்பிய உணவுடன்.

  "நேத்தும் இதையேதான் சொன்ன"

  "இன்னைக்கும் அதையேதான் சொல்றேன்.. எப்பயும் மாத்தி பேச மாட்டாள் இந்த மிதுனா.."

  "க்கும்.. பேசறது சமாதானம், இதுல கெத்து வேற"

  இருவரும் உணவை முடித்துவிட்டு அங்கேயுள்ள வாஸ்பேசனில் கையையும், பாக்ஸையும் கழுவிவிட்டு, அதை மூடியவாறே கேபினிற்குள் நுழைந்தனர்.

  வழக்கம்போல மிதுனாவின் டெஸ்கில் ரோஜா பொக்கே அவளைப் பார்த்து சிரித்தது.

  "வாவ்.. இன்னைக்குமா.. அழகா இருக்குடி" என ரோஜாவை கையால் தடவியவாறே வினவினாள் பூஜா.

  எதுவும் பேசாமல் அந்த பொக்கேயை எடுத்த மிதுனா அவர்களின் கேபினிற்கு வெளியே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.

  "அது யார் அனுப்புனாங்கனாவது பாக்கலாம் இல்லடி"

  "வேணாம் பூஜா.. ஐ டோன்ட் ஹேவ் எனி இன்ரஸ்ட்.." என்றவள் தனது வேலையை தொடங்கிவிட்டாள்.

  'இவள் சரிப்பட மாட்டாள்' என நினைத்த பூஜா அந்தப்பக்கம் திரும்பி அருகிலுள்ள பெண் உடன் பேச ஆரம்பித்துவிட்டாள்.

  மாலையில் இருவரும் கிளம்பினர். அவர்கள் டெஸ்கிற்கு அருகிலுள்ள அனைவரிடமும் பாய் சொல்லிவிட்டு கேபினிலிருந்து வெளியே வந்து படிகளில் இறங்குகையில் மிதுனாவை சைட் அடிக்கும் மூன்று குரங்குகளும் அவர்கள் பின்னாலேயே வந்தது.

  எப்பொழுதும் சும்மா வருபவர்கள் இன்று விசில் அடித்துக்கொண்டே வந்தனர்.

  "என்னடி விசிலடிக்கறாங்க" பூஜா.

  "அவங்க என்னமோ பண்ணிட்டு போறாங்க.. விடு பூஜா"

  "இல்லைடி.. பசங்க கொஞ்சம் முன்னேறிட்டானுங்க"

  "என்ன"

  "ஆமாம்டி.. எப்பயும் சாம்பிராணி மாதிரி இருக்கறவங்க இன்னைக்கு விசில் அடிக்கற அளவுக்கு வந்துட்டானுங்கனா பாரேன்"என்றாள் வடிவேலு பாணியில்.

  அவள் பேச்சில் சிரிப்பு வந்தாலும், பல்லைக் கடித்துக்கொண்டு அதை அடக்கினாள் மிதுனா. பூஜா வண்டி நிற்கும் இடத்திற்குச் சென்று, அவளின் வண்டியை தள்ளிக்கொண்டே வந்து, மிதுனாவை அவளின் பஸ்ஸில் ஏற்றிவிட்டுவிட்டு வண்டியில் பறந்துவிட்டாள்.

  மாலையில் 6 மணிக்கு தனது பஸ்டாப்பில் இறங்கிக்கொண்ட மிதுனா, அருகிலுள்ள ஸ்டோருக்குச் சென்று சரணிற்கு சாக்லேட்டும், இன்னும் பிற கொறிப்பவைகளும் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

  வீட்டிற்கு வந்து கேட்டைத் திறந்தவளை "சிச்சி" என ஓடி வந்து அணைத்துக்கொண்டான் சரண்.

  "சரண் கண்ணா" என அவனைத் தூக்கி கொஞ்சியவள் அவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டவாறே வீட்டினுள் நுழைந்தாள்.

  தான் வாங்கிவந்த நொறுக்குத்தீனியை டேபிளில் வைத்தவள், சோபாவில் அமர்ந்திருந்த அப்பவின் அருகில் அமர்ந்து சரணுடன் கதை பேசத் தொடங்கினாள்.

  இவளின் சத்தத்தைக் கேட்டு அனிதா காபி கொண்டுவர, அதை வாங்கிக் கொண்டவள் தந்தையிடமும், அக்காவிடமும் அன்று காலையிலிருந்து நடந்ததை கூறத் தொடங்கினாள்.

  'இவளிற்கும், சரணிற்கும் வித்தியாசமே இல்லை.. அப்படியே என்ன நடந்தாலும் எங்ககிட்ட ஒப்பிச்சறனும்' என நினைத்துக் கொண்டாள் அனிதா.

  பாவம் அவளுக்குத் தெரியவில்லை.. இனி அவள் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை யாருடனும் பகிர முடியாமல் தவிக்க போகிறாள் என்றும்.. அவளுக்கே தெரியாமல் அவள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களும்...

  - தொடரும் .
   
   
Loading...

Share This Page