Infaa's "Nee Enthan Puthumaiye" - Story

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Jaasmin, Aug 24, 2019.

Thread Status:
Not open for further replies.
 1. Jaasmin

  Jaasmin Roots of LW Administrator

  Messages:
  8
  Likes Received:
  59
  Trophy Points:
  33
  தோழமைகளே,

  நமது தள எழுத்தாளரான இன்பா அலோசியஸ் தனது அடுத்த படைப்பான "நீ எந்தன் புதுமையே" கதையோடு நம்மை சந்திக்க வருகிறார்.

  வாழ்த்துகள் இன்பா !!!!!

  கதையின் கருத்துக்களை கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பதிவோமா?

  கருத்துகளுக்கான இணைப்பு:

  https://ladyswings.in/community/threads/7925/
   
   
 2. infaa

  infaa Bronze Wings New wings LW WRITER

  Messages:
  10,407
  Likes Received:
  44,976
  Trophy Points:
  113
  ஹாய் தோழிகளே,

  உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புதுக் கதையுடன் சந்திக்க வந்துவிட்டேன். கொஞ்சம் அதிக இடைவெளி ஆகிவிட்டது. உங்களையெல்லாம் சந்திக்காமல் இருந்தது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. புதிய கதை கேட்ட உங்களுக்காகவே இது.

  கதையின் தலைப்பு : நீ எந்தன் புதுமையே.

  கதையின் நாயகன் : அனிருத்தன்.

  கதையின் நாயகி : மித்ரா.

  திருமண நாளன்று தோழி தன் காதலனுடன் செல்ல உதவி செய்யும் நாயகி. தோழிக்கு உதவிவிட்டு, மணமகனிடம் விஷயத்தைச் சொல்ல வந்தால், அவளே மணமகள் ஆவதும், தன்னவள் எனக் கருதியிருந்த பெண் திருமண நாளன்று விட்டுச் செல்ல, விதியின் வசத்தால் நாயகியை மணப்பெண்ணாக, தன் மனைவியாக ஏற்கும் நாயகன்.

  உண்மை தெரிய வந்தால் நாயகன் என்ன சொல்வானோ என தயங்குவதும், தான் ஒரு அநாதை என்பதால் அவனை விட்டுச் செல்ல தயாராக இருப்பதும், அதை அவனிடமே சொல்வதும் என நிறைய சொதப்பி வைக்க,

  தன் மனைவியை விட்டுப் பிரிய அனிருத்தன் சம்மதம் சொன்னானா? உண்மை தெரிய வருகையில் அவளது நிலை என்ன ஆகும்?

  இதற்கான விடையை அறிந்துகொள்ள என்னுடன் தொடர்ந்து வாருங்கள்.

  முந்தைய கதைகளுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவை இப்பொழுதும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள்முன் வருகிறேன்.

  வழக்கம்போல் புதன்கிழமை, சனிக்கிழமைகளில் பதிவுகள் தொடர்ந்து வரும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

  உங்கள் அன்புத் தோழி,
  இன்பா அலோசியஸ்.
   
  Arya, Bhuvanaa Shankar, SABI and 44 others like this.
   
 3. infaa

  infaa Bronze Wings New wings LW WRITER

  Messages:
  10,407
  Likes Received:
  44,976
  Trophy Points:
  113
  நீ எந்தன் புதுமையே.

  பகுதி – 1.


  அதிகாலை ஐந்து முப்பது மணி. இருள் பிரியாத அந்த நேரத்தில், தனக்கு மிகவும் பரிட்சயமான ஆட்டோவை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் திருமண மண்டபத்துக்கு ஐந்தே நிமிடங்களில் வந்து சேர்ந்துவிட்டாள் மித்ரா.

  நடந்து வந்திருந்தால் கூட வந்திருக்க முடியும். ஆனால், இருக்கும் பதட்டத்தில் அவளால் நடக்க முடியும் என்றே தோன்றாததால் மட்டுமே ஆட்டோவில் வந்தாள்.

  “அம்மாடி, நான் நிக்கவா கிளம்பட்டுமா?” இந்த நேரத்தில் அவள் தனியாக எங்குமே சென்றதில்லை என்பதால் அந்த வயதான டிரைவர் கேட்டார். அதைவிட அவளது முகத்தில் ஓடிய அந்த பதட்டத்தை உணர்ந்து மட்டுமே கேட்டிருப்பார் என அவளுக்குத் தெரியாமல் இல்லை.

  அந்த அக்கறை நெஞ்சை நனைக்க, “தாத்தா... நீங்க இருங்க, நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்” தன் முகத்தில் அரும்பிய வியர்வையை புறங்கையால் மெல்லியதாக துடைத்துக் கொண்டாள்.

  அவள் முகத்தில் என்ன கண்டாரோ? “என்னமா, ஏதாவது பிரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்” அவளை இப்படி கண்டதே இல்லை என்பதால் ஆதரவாக கேட்டார்.

  “இல்ல... அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க இருங்க...” தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியம் என்பது புரிய வேகமானாள்.

  “சரிம்மா பாத்து போ... நான் இங்கே பக்கத்தில்தான் இருப்பேன், ஏதாவது அவசியம்ன்னா கூப்பிடும்மா...” அந்த நேரத்தில் அவரது உடனிருப்பு பெரும் பலத்தைக் கொடுத்தது. நடையை எட்டிப் போட்டாள், இதயமோ வேகமாக அடித்துக் கொண்டது.

  மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க, ஆறரைக்கு முகூர்த்தம் என்பதால், மண்டபத்தில் தங்கியிருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக எழுந்து கொள்வது அவளது பார்வைக்குப் பட்டது.

  ‘இப்பொழுது முதலில் எங்கே சென்று யாரிடம் என்ன சொல்ல?’ ஒரு நொடி கையைப் பிசைந்தாள்.

  அவளுக்கு இப்படியான விசேஷங்களில் எல்லாம் கலந்துகொண்டு பழக்கமே இல்லை. ‘எந்த பக்கம் செல்வது?’ என யோசனையில் ஒரு நிமிடம் அவள் திணற, பார்வையோ அந்த இடத்தையே சுழன்று அலசியது.

  அவளது தேடலுக்கு பலனாக ‘மணமகள் அறை’ என்ற வாசகம் அவள் கண்களில் பட, மேடைக்கு இடதுபக்கம் ஓடிய படிக்கட்டில் வேகமாக தாவி ஏறினாள். அந்த அறையை நெருங்கும் முன்பே... உள்ளே இருந்து பெரும் கூச்சலும், குழப்பமுமான ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தது.’

  “இதுக்குத்தான் நான் படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா? என்னவோ எல்லாத்தையும் பாத்துக்குவேன்னு சொன்ன... இப்போ என்ன ஆச்சு பார்” ஒருவர் கத்திக் கொண்டிருக்க,

  “நான் கண்ணு கூட மூடாம அவளை பாத்துக்கிட்டுதான் இருந்தேன். பாவி மக, இப்படி செய்வான்னு நான் நினைக்கலையே...” ஒரு பெண்மணியின் அழுகுரல் அவளைத் தீண்டியது.

  ‘ஹையோ...’ திக்கென அவள் அதிர்ந்து நிற்க,

  “மாப்பிள்ளை வீட்டுக் காரங்களுக்கு இப்போ என்ன பதில் சொல்வது? அவங்க ஏதாவது கேள்வி கேட்டா முகத்தை எங்கே கொண்டுபோய் வச்சுக்குறது? இதை யார் அவங்ககிட்டே சொல்வது?” அவர் மீண்டுமாக மனைவியிடம் பொரிய, மித்ரா அப்படியே நின்றுவிட்டாள்.

  அதிகாலை முகூர்த்தத்துக்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு என்பதால், மண்டபத்தில் மிதமான மக்களே இருந்தார்கள். அதுவும், மணமகள், மணமகன் அறை முதல் மாடியில் என்பதால், இவர்களது பேச்சும் கீழே இருந்தவர்களை எட்டவில்லை.

  அவர்களது பேச்சைக் கேட்ட மித்ரா, ‘ஹையோ... அவருக்கு இன்னுமே தெரியாதா? இவங்க ஏன் இப்படி பண்றாங்க? அவர்கிட்டே தானே முதல்ல சொல்லணும்’ அவள் மனதுக்குள் யோசனை ஓடியது.

  “அவளைப் பற்றி தெரிஞ்சும் நீ எப்படி அவளை தனியா விட்ட?”.

  “நான் எங்கே அவளை தனியா விட்டேன்? ரெண்டுமணி வரைக்கும் ஒரு போட்டுகூட தூங்காமல் முழிச்சு காவல் காத்துக்கிட்டுதான் இருந்தேன். அதுக்குப் பிறகு செத்த கண்ணசந்தேன்... முழிச்சுப் பாத்தா அவளைக் காணோம்”.

  “ஆமா... இப்போ சொல்லு... வீட்டு விஷயம் வெளியே தெரிஞ்சால் அவமானம்னு யார்கிட்டேயும் சொல்லாமல் மறைச்சு... இப்போ... இந்த அவமானத்தை எப்படி சகிக்க? வெளியே இருக்க சொந்தக்காரனுக்கு எல்லாம் என்ன பதில் சொல்றது?” மனைவியிடம் மகளது காதல் தெரிந்த உடனேயே, மகளை கொஞ்ச நாள் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடலாம் என அவர் சொன்னதை கேட்காமல் போய்விட்டாரே என்ற கோபம் அவருக்கு.

  “இப்போ என்னங்க செய்ய?”.

  “ஆமா... இப்போ கேளு...” மகளைக் காணவில்லை என்ற பதட்டத்தில் அவரால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.

  தாமரையின் தாயோ வாய் மூடி விசும்பியவர், “இதுக்குமேலே இங்கே இருக்க முடியாது... வாங்க கிளம்பிடலாம்...” அவர் சொல்லவே,

  “நீ கிளம்பிப் போய்டுவ... நம்ம பேச்சை நம்பி வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டு ஆட்களுக்கு என்ன பதில் வச்சிருக்க?” அவர் கேட்க, தாமரையின் தாயின் அழுகுரல் மட்டுமே கேட்டது.

  இவர்கள் இங்கே வாதாடிக் கொண்டிருக்க, மித்ராவோ எதிரில் இருந்த மணமகன் அறையைப் பார்த்தாள். படிக்கட்டுக்கு இடப்பக்கம் மணமகள் அறையும், வலப்பக்கம் மணமகன் அறையும் இருக்க, இவர்கள் அறைக்குள் பேசுவது மற்றவர்களை எட்டவில்லை.
   
   
 4. infaa

  infaa Bronze Wings New wings LW WRITER

  Messages:
  10,407
  Likes Received:
  44,976
  Trophy Points:
  113
  மித்ராவால் அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. எப்படியாவது அனிருத்தனை இந்த அவமானங்களில் இருந்து, தலை குனிவில் இருந்து காக்க வேண்டும் என்று தோன்ற, வேகமாக மணமகன் அறையை நோக்கி விரைந்தாள்.

  இன்னும் சற்று நேரத்தில் மணவறையில் அமர வேண்டியவனின் முன்னால் சென்று, ‘உனக்கு மனைவியாக வேண்டியவள் வேறு ஒருவனுடன் சென்றுவிட்டாள்’ என எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால், ‘அது உனக்கு எப்படித் தெரியும்?’ எனக் கேட்டால் என்ன பதில் சொல்வது?

  சட்டென மனதுக்குள் குளிர் பிறந்தாலும், அவளால் பின்வாங்க முடியவில்லை. ஆழமாக மூச்செடுத்து தன்னை சரி செய்தவள், மிகுந்த தயக்கத்தோடு அறைக்கதவை தட்டினாள்.

  அடுத்த நிமிடம் அறைக்கதவு திறக்கப்பட, கதவைத் திறந்த அந்த புதியவனை சிறு குழப்பமாகப் பார்த்தாள். ‘வேறு திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டோமா?’ அவள் யோசனையோடு கையில் இருந்த அழைப்பிதழை பார்க்க,

  அவளது குழப்பமான முகத்தைப் பார்த்தவன், அவளது கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்துவிட்டு, “நீங்க சரியான கல்யாணத்துக்குதான் வந்திருக்கீங்க. மாப்பிள்ளை கிளம்பிகிட்டு இருக்கான்...” அவன் பின்னால் திரும்பிப் பார்த்து சொல்ல, அறைக்குள் இன்னும் சிலருடன் அனிருத்தன் இருப்பது அவளுக்குத் தெரிந்தது.

  ‘அவர் என்னவோ தனியா இருப்பார்ன்னு பார்த்தால்... இப்படி...?’ அவன் அறைக்குள் இவ்வளவு பேரை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளைப் பொறுத்த வரைக்கும் ஆண்களுடனான அவளது பேச்சு எல்லாம் ஒன்றிரண்டு வார்த்தைகளாகத்தான் இருந்திருக்கிறது. இது... அவள் தயங்க...

  “டேய் மாப்ள... பொண்ணுகிட்டே இருந்து உனக்கு ஏதோ சேதி வந்திருக்கு போலடா... என்னன்னு வந்து கேள்...” உரைத்தவன் அவளை அறைக்குள் அழைக்கவில்லை. அந்த நேரத்துக்கு, மணப்பெண்ணின் வயதுடைய ஒருத்தி மணமகன் அறைக்கு வந்தால், மணமகளிடமிருந்து ஏதோ சேதி வந்திருக்கிறது போல என எண்ணிக் கொண்டான்.

  “யார்டா...?” கேட்டவன் நண்பர்களை விலக்கிவிட்டு முன்னால் வர, மித்ராவைப் பார்த்தவன், கொஞ்சமாக பரிட்சயமான முகபாவனையைக் காட்டினான்.

  “ஹாய் மித்ரா நீங்களா...? மணமகள் அறை அங்கே...” ஒரு வேளை அவள் தெரியாமல் இங்கே வந்துவிட்டாளோ என்று எண்ணினான்.

  “இல்ல... நான்... எனக்கு...” அவள் திணற, அவனது புருவம் முடிச்சிட்டது.

  “டேய்... எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்கடா... உள்ளே வாங்க...” அவள் முகத்தில் இருந்த ஒருவித கலவரம், வியர்வை வழிய அவள் நின்ற தோற்றம்... எதுவோ சரியில்லை என்ற உணர்வை அவனுக்கு கொடுக்கவே, நண்பர்களை வெளியேறச் சொன்னான்.

  அதே நேரம், அவனது தாய் அங்கே வந்தவர், “என்னப்பா ரெடி ஆயிட்டியா? இது யார்...? உன் ப்ரண்டா? வாம்மா...” திருமண அவசரம் அவர் முகத்தில் தெரிந்தது. கூடவே... அப்படி ஒரு சந்தோஷமும் தெரிய, அந்த சந்தோசம் நொடியில் காணாமல் போகப் போகிறதே என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.

  “அம்மா... உள்ளே வாங்க... வாங்க மித்ரா...” இருவரையும் அறைக்குள் அழைத்தவன், அவர்கள் முதுகுக்குப் பின்னால் கதவை சாற்றினான்.

  “சொல்லுங்க மித்ரா...” அவன் நேரடியாக விஷயத்துக்கே வர,

  “என்ன சொல்லச் சொல்ற அனிருத்? இப்போ பேசுறதுக்கு எல்லாம் நேரமில்லை... இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ மணவறையில் உக்காரணும், சீக்கிரம்...” அவனை அவசரப்படுத்தினார் அவனது தாய்.

  “அம்மா, ஒரு ரெண்டு நிமிஷம் பேசுறதால் எதுவும் ஆகிடாது... நீங்க சொல்லுங்க” கையைப் பிசைந்து கொண்டிருந்த அவள் பக்கம் திரும்பினான்.

  “சார்... அது... தா...தா...தாமரை... இ..ங்கே.. இல்...லை...” அவளால் தான் சொல்ல வந்ததைக் கூட கோர்வையாக சொல்ல முடியவில்லை. அங்கே இருக்கும் சந்தோசம் அத்தனையையும் தான் ஒருத்தி கெடுப்பதுபோல் ஒரு எண்ணம்.

  ஆனால் அது அப்படி இல்லை என்பது அவளுக்கும் தெரியும். ஆனால்,ஒரு விரும்பத்தகாத செய்தியைச் சொல்கையில், அவளால் எப்படி முழுதாக சொல்ல முடியும்?

  “என்ன? என்ன சொல்றீங்க? தாமரை இங்கே இல்லையா? அப்படின்னா?” அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவள் சொல்ல வரும் செய்தி புரிவது போலவும், புரியாதது போலவும் ஒரு தோற்றம்...

  ஆனால் அவனது தாய்க்கு அப்படி இல்லை போல... “என்னம்மா சொல்ற? மணமேடையில் உக்கார வேண்டிய நேரத்தில்... இப்படி பொண்ணு இல்லன்னு வந்து சொல்ற?” அவர் தன்னை மீறி அதிர்ச்சியில் குரல் உயர்த்த, வேகமாக தாயை தன் கை வளைவுக்குள் இழுத்துக் கொண்டான்.

  அதே நேரம்... “அனிருத்... அனிருத்...” அவனது தந்தையின் குரல் பெரும் பதட்டத்தில் வெளியே ஒலிக்க, “அம்மா... கொஞ்சம் பதட்டப்படாம இருங்க...” அவனுக்குள் எழுந்த பெரும் அதிர்ச்சியை மறைக்க முயன்று தோற்று, முனகியவன் கதவைத் திறந்தான்.

  வெளியே நண்பர்களின் முகங்கள் அனைத்தும் பேரதிர்ச்சியில் இருக்க, தந்தையின் முகத்தில் இருந்த பதட்டமும், தவிப்பும்... மித்ரா சொன்ன சேதியில் இருந்த உண்மையை அவனுக்கு அப்பட்டமாக உணர்த்தியது.

  “ரேவதி... ருத்ரா...” உள்ளே நுழைந்தவருக்கு விஷயத்தை அவர்களிடம் எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை.

  “என்னங்க... இந்த பொண்ணு என்னவோ சொல்றாங்க... நீங்க கொஞ்சம் என்னன்னு கேளுங்க” கணவனிடம் ஓடினார்.

  மனைவியை தாங்கிக் கொண்டவர், “நீ யாரும்மா...?” அவளிடம் கேட்க,


  “நான்... தாமரையோட தோழி...” தயங்கி தயங்கி, தலையைக் குனிந்தாள்.
   
   
 5. infaa

  infaa Bronze Wings New wings LW WRITER

  Messages:
  10,407
  Likes Received:
  44,976
  Trophy Points:
  113
  அனிருத் இவர்களது எமோஷனல் எதிலும் கலந்துகொள்ளாமல், அமைதியாக சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டான். அவனது நண்பர்கள் அனைவரும், அவனிடம் ஒருவித மன்னிப்பை வேண்டிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட, அறைக்குள் மிஞ்சியவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

  “ஹையோ... என் புள்ளைக்கா இப்படி நடக்கணும்? இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னவனை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வச்சேனே... அவனுக்கு இப்படி ஒரு அவமானத்தை தேடி வைக்கவா இதைச் செய்தேன்? இப்போ நான் என்ன செய்வேன்?” ரேவதி வாய்விட்டே அழுது அரற்ற, பாஸ்கருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

  “சொந்தத்தை எல்லாம் கூட்டி வச்சு இப்படி ஆயிப் போச்சே... இனிமேல் என் புள்ளை எப்படி தலை நிமிந்து நடப்பான்?” அவரால் தாங்க முடியவில்லை. தாயின் எந்த பேச்சுக்கும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

  “என்னங்க... என்னவாம்...? எனக்கு தெரிஞ்சாகணும்?” ரேவதி அறையில் இருந்து வெளியேற முயல, அவரைத் தடுத்து நிறுத்தினார்.

  “என்னை விடுங்க...” கணவரது கரத்தை உதறியவர் மணமகள் அறையை நோக்கிச் சென்றார். பாஸ்கரும் மனைவியின் பின்னால் செல்ல, அவளது பார்வை அனிருத்தை ஏறிட்டது.

  ‘விஷயத்தை சொல்லிவிட்டோம்... சென்று விடுவோமா?’ என எண்ணியவள் அவன் முகம் பார்க்க, அதில் தெரிந்த இறுக்கம், ஒருவித அவமானம், செயல்பட முடியாத ஒரு நிலை... அவனை அப்படியே விட்டுச் செல்ல அவளால் முடியவில்லை.

  “சார்...” அவள் தயக்கமாக அழைக்க, அதற்குள்ளாகவே விஷயம் மண்டபம் முழுக்க பரவி, பெண்ணைப் பற்றிய விமர்சனம் ஒரு பக்கமும், பெற்றவர்கள் அவளை ஒழுங்காக வளர்க்கவில்லை என ஒரு பக்கமும், மணமகனுக்காக அனுதாபப்படும் விதத்தில், அவனது தன்மானத்தையே சீண்டிப் பார்க்கும் விமர்சனங்களும் அரங்கேற, அவளாலே அதை கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.

  ரேவதி, மணமகள் அறைக்குச் சென்று, “உங்க பொண்ணுகிட்டே சம்மதம் கேட்டுத்தானே இந்த கல்யாணத்தை நிச்சயம் பண்ணீங்க. இப்போ உங்க பொண்ணு இப்படி செஞ்சுட்டாளே, இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” கேள்வி கேட்க, அவர்கள் என்ன பதில் சொல்வதாம்?

  “உங்க பொண்ணு ஒருத்தன் மேலே ஆசைப்படுவது உங்களுக்கு முதலிலேயே தெரியுமா இல்லையா? சொல்லுங்க...” அவர் கத்த,

  “அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தால் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கவே மாட்டாங்களே” அவர்களது உறவுக்கார பெண்மணிதான் பதில் கொடுத்தார்.

  “நான் அவங்ககிட்டே கேள்வி கேட்டேன். அவங்க பதில் சொல்லட்டும்” ரேவதி விடுவதாக இல்லை.

  “எங்களை மன்னிச்சிடுங்க... எங்க பொண்ணு இப்படி செய்வான்னு நாங்க எதிர்பாக்கவே இல்லை. இது எங்களுக்கும் அவமானம்தான்...” தாமரையின் தந்தை இடைபுக,

  “உங்களுக்கு என்னங்க அவமானம்? மணவறை வரை வந்த என் மகனோட நிலையை நினைச்சுப் பாருங்க. அவன் மனசு என்ன பாடுபடும்?” தன் மகன் இனிமேல் மறுபடியும் இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு சம்மதிப்பானா என்பது கேள்விக்குறியாகும் நிலை வந்துவிடும் என்பதில் அவருக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லையே.

  “இப்பல்லாம் கல்யாணம் இப்படி நின்னு போனா, பொண்ணுக்கே அதே மேடையில் கல்யாணம் நடக்குது. பையனுக்கு என்னங்க... இப்போவே தேடுங்க பொண்ணு கிடைக்கும்” ஒருத்தி சொல்ல, ரேவதிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

  இவர்கள் ஒரு பக்கம் போராட, மணமகன் அறைக்குள் கையைப் பிசைந்தவாறு நின்ற மித்ரா, “சார்... நான்... சாரி... இப்படியெல்லாம்...” அவனிடம் என்ன சொல்லி ஆறுதல் சொல்லவென்று அவளுக்குத் தெரியவே இல்லை.

  அவனோ, “இதுக்கு முன்னாடி என்கிட்டே பேச வந்தது எல்லாம் இதைப் பத்தி தானா?” அவள் முகம் பார்க்க முடியாமல், தரையைப் பார்த்தவாறே குரல் இறுக, கைமுஷ்டி இறுக கடினமாக கேட்டான்.

  “ஆ..ஆ...மா... தாமரை கிட்டே... நான்...” அவள் எதையோ துவங்க, அவன் சட்டென நிமிர்ந்து பார்த்த பாவனையில் அவள் வாயடைத்துப் போனாள்.

  “உங்களுக்கு கண்டிப்பா இன்னொரு நல்ல பொண்ணு கிடைப்பா...” பேச பயமாக இருந்தாலும் அவனுக்கு தைரியம் சொல்லவேண்டும்போல் இருந்தது.

  அதற்குள் பெண் வீட்டாரிடம் பேசப் போன ரேவதியும், பாஸ்கரும் வந்துவிட, “அம்மா... வாங்க கிளம்பலாம்... இதுக்கு மேலே இங்கே இருக்க வேண்டாம்...” அவன் தன் பட்டு சட்டையை கழற்ற, வேகமாக வந்த ரேவதி அவனைத் தடுத்தார்.

  “இல்ல... என் புள்ளையோட கல்யாணத்தை நடத்தாமல் நான் இங்கே இருந்து வர மாட்டேன். என்னங்க... மண்டபத்தில் தேடுங்க...” அவர் சொல்ல,

  “அம்மா... இன்னுமா எனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கணும்னு ஆசைப் படுறீங்க? இந்த அவமானமே எனக்கு போதும்... இன்னொரு அவமானத்தை என்னால் தாங்கிக்க முடியாது...” அங்கே இருந்த யாரின் முகத்தையும் அவனால் ஏறிட்டு பார்க்கவே முடியவில்லை.

  “ஆண்டவா... நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? ஏன் என் புள்ளையை இப்படி சோதிக்கற? அனிருத், இந்த அம்மா சொன்னா கேப்ப தானே...” அவன் கழட்டிய இரண்டு பட்டன்களையும் அவரே போட்டுவிட்டார்.

  பாஸ்கரோ... “ரேவதி... இதென்ன விளையாட்டு விஷயமா? நிதானமா இரு” மனைவியை அடக்க முயன்றார்.

  ரேவதிக்கு ஒரு விஷயம் உறுதியாகத் தெரியும்... இன்று அவனது திருமணம் நடக்கவில்லை என்றால், நிச்சயம் அவனது வாழ்க்கையில் அடுத்ததாக இப்படி ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பே அவன் அளிக்க மாட்டான் என்பது உறுதியாகத் தெரியும். பெற்றவர்களுக்கு தங்கள் மகனைப் பற்றி தெரியாதா என்ன?

  எனவேதான் அவ்வளவு பிடிவாதமாக இருந்தார். அது பாஸ்கருக்கும் புரிந்ததுதான். ஆனால், சொந்தத்தில் அவன் கட்டுவதற்கு தக்கன பெண்ணே இல்லை என்பதால் மட்டுமே அவனுக்கு அசலில் பெண் பார்த்தார்கள்.

  அப்படி இருக்கையில், திடுமென பெண்ணை பார் எனச் சொன்னால் என்ன செய்வது? தங்கள் ஒரே மகனின் திருமணம் இப்படியா ஆக வேண்டும் என்ற வேதனை அவரையும் ஆக்கிரமித்தது.

  “என்னங்க... நான் ஏன் இப்படி தவிக்கறேன்னு உங்களுக்குமா புரியலை?” அவர் அழுது அரற்ற, ஒதுங்கி நின்றிருந்த மித்ராவின் கண்களும் கலங்கியது.

  அனிருத்தின் முகத்தைப் பார்த்தே... ‘இனிமேல் அவன் வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்ற முடிவுக்கு அவன் வந்திருப்பது தெரிய, தவித்துப் போனாள்.
  அதற்குள்ளாக தாமரையின் வீட்டினர், உறவுகள் என அனைவரும் கிளம்பிப் போயிருக்க, மண்டபத்தில் அவர்கள் மட்டுமே மிஞ்சினர்.


  “என்ன அண்ணி... நம்ம அனிருத்துக்கு என்ன குறைச்சல்... கொஞ்ச நாள் போனால் இவளை விட நல்ல பொண்ணாவே பாத்து செய்யலாம்...” அவரது உறவுகள் கொடுத்த தைரியத்தை எல்லாம் கேட்கும் நிலையில் ரேவதி இல்லை.

  பாஸ்கரோ, “எல்லாம் கொஞ்சம் எங்களை தனியா விடுங்க... கூடவே உங்க பக்கம் ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க...” அவர் சொல்ல, அனைவரும் சற்று கலைந்து சென்றார்கள்.

  அனிருத் அங்கே இருந்த பால்க்கனி கதவைத் திறந்துகொண்டு அங்கே சென்று நின்றுவிட, அவன் தன் உணர்வுகளை, கொந்தளிப்பை கட்டுப்படுத்த போராடுவது மித்ராவுக்கு நன்றாகவே தெரிந்தது.
   
   
Loading...
Thread Status:
Not open for further replies.

Share This Page